பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கவிதையும் வாழ்க்கையும்


என்ன என்று எண்ணிக் கொண்டிருப்பானாயின், அவன் கவி தட்டுப்பட்டதாகும். சொற்களின் அகராதியாக அவன் இருக்க வேண்டும். கொண்ட கருத்தைக் கவிதையாக்கி மற்றவருக்கு வாரி வழங்க வழிகாட்டுவன சொற்களேயன்றி, வேறென்ன? எனவே, அவன் சொற்களைத் தன் ஆணைவழிச் செலுத்தும் திறமை உடையவகை வேண்டும். அப்போதுதான். கவிதை தங்குதடையின்றி ஊற்றெடுக்கும். இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று என்று ஒருவகையில் கூறியது போன்று, ஒர் அளவு பொருள் நலம் குறைந்திருந்த போதிலும், சொற்களின் அமைப்பு முறையாலே அக்குறை தோன்ருது. ஆனால் அதற்காகச் சொற்களுக்கே முதலிடம் தந்து பொருளை மறந்துவிடுதல் கவிஞன் கொள்கையாகாது. கவிதையின் அடிப்படை, உள்ளம் உருக்கும் பொருளேயாம்! ஆம்! அந்த அடிப்படை முக்கியம்.

கவிதையின் ஆழம் அளப்பதரியதாகும். சொல்லும் பொருளும் சேர்ந்தது கவிதை என்று சுருக்கமாகச் சொல்லி விட்டோம். ஆனாலும், அவற்றின் ஆழத்தை அளந்தறிதல், என்பது எளிதன்று. ஒரு சிலர் வெறுஞ் சொற்களை வைத்துக் கொண்டு விளையாடலைப் புரிவார்கள். ஒரு சிலர் உயர்ந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு சொல்லத் தெரியாமல் திண்டாடுவார்கள். ஆனால் இரண்டையும் ஒருசேரக் கைவரப்பெற்ற புலவர்கள் பாடல்களின் ஆழம் காணுதல் அவ்வளவு எளிதன்று. இத்தகைய நல்ல கவிஞர்தம் கவிதைகளை உள்ளத்து அமைத்துத்தான் போலும் வள்ளுவர், ‘பயில்தொறும் நூல் நயம் போலும்’ என்றும், அறிதொறும் அறியாமை கண்டற்ருல் என்றும் பாடிச் சென்றிருக்கிறார்! பயில்தொறும் நூல் நயம் காண்ப தெவ்வாறு? ஒரு நூலைப் பயிலும் ஒருவன், திரும்பத் திரும்ப அந்நூலைப் பயில்வானாயின், ஒவ்வொரு முறையும் படிக்குந்தோறும் புத்தம் புதிய கருத்துக்களை அந்நூலின் பாக்கள் அவனுக்கு வாரி வழங்கிக் கொண்டே இருக்கவேண்டும். நூலின் நயம் பயிலப் பயில மேலும் மேலும் இனிக்கவேண்டுமே.தவிரப் புளிக்கக் கூடாது.