பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கவிதையும் வாழ்க்கையும்


போதிலும், தொல்காப்பியத்திலே, ‘உவம இயல்’ என்ற ஒன்றில் உவம அணியைப் பற்றிய சிறப்பினை மாத்திரம் எடுத்துக் காட்டியுள்ளனர் அதன் ஆசிரியர். காலப்போக்கில் அழகுக் கழகு செய்யவும், அழகற்றவற்றை அழகுற்றன போன்று காட்டவும் பற்பல அணிகள் தோன்றலாயின. தண்டி அலங்காரமும், மாறன் அலங்காரமும் அவற்றை வரையறுத்து வைக்கும் இலக்கண நூல்களாய் அமைந்தன. எத்துணைப் பிரிவுகளாக இப் பிற்கால நூல்கள் அணியைப் பெருக்கிக் காட்டினும், அறிவுடையார் தொல்காப்பியர் கண்ட அந்த உவமை அணி ஒன்றிலே அனைத்தும் அடங்கியுள்ளதை நன்கு அறிவர். அவ்வுவமை அணியின் நலம் பற்றிப் பின்னர் ஒர் இடத்தில் காண இருக்கின்றமையின், அதை விடுத்து, அவ்வணி வகையின்பாற் பட்டு விரித்துரைக்கப்பட்ட சித்திர கவிகளை மட்டும் இங்கு நோக்குவோம்.

சித்திர கவிகள் என்னும் போது, நாட்டில் வழக்கத்திலுள்ள நால்வகைக் கவிஞருமே நம்முன் வந்து நிற்பர். ஆசு கவி எனவும், மதுர கவி எனவும், சித்திர கவி எனவும், வித்தார கவி எனவும் கவி வகையினையும், அவற்றின் மூலம் அக்கவிகளைப் பாடும் புலவர்களையும் பாகுபடுத்தியுள்ளனர் இடைக்காலப் புலவர். எனவே, கவிதை பொருளாலும், அளவாலும், அமைப்பாலும் வேறுபடுவதன்றி, பாட்டின் நடை முதலியவற்றாலும் இவ்வாறு நான்கு வகைப்படும் என்பதையும் அறிந்தால் தான், கவிதையின் வேறுபாடுகளை அறிந்தவர்களாக முடியும். முதலில் இங்குக் கண்ட சித்திரகவியின் பிரிவுகளையும் முறைகளையும் கண்டு, மேல் பிறவற்றைக் காணலாம்.

அணி இலக்கணமாகிய தண்டியலங்காரத்திலும், மாறனலங்காரத்திலும் ‘சொல்லணி இயல்’ என்ற பிரிவு ஒன்று உண்டு. அதில் பாக்களில் வரும் சொற்களைக்கொண்டு அழகு நலத்தை விளக்கியுள்ளார்கள். அப் பாடல்களைப் பாம்பு, மத்தளம், முரசம், தாமரை, சக்கரம் ஆகிய அமைப்புகளுக்குள் அமைத்து, அடியும் பொருளும் கெடாதவகையிலே அழகாகப் பாடி விடுவார்கள். இவையே சித்திர கவி எனப் பெயர்