பக்கம்:கவிதை உள்ளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தமே முத்தம்

மாலைப் பொழுதிலொரு மிகுமயக்கிலே
மனது குளிருமொரு மகிழ்ச்சியிலே
மேலைக் கடலினிடைச் செங்கதிரோன்
மேனி மறைத்து உள்ளே சேர்கையிலே
பாலைப் பழிக்கும் உயர் தண்மதியோன்
பக்கல் குணக்குதிசை வந்திடவே!
சாலப் பலப்பலநற் றன்மையிலே
சலனக்கடல் மீதிருக்கும் தன்மை உரைப்பேன்

வெண்மை மிளிரும் ஒளி வெள்ளலைகள்
மேன்மேல் கிளம்பித் துளிவீசிடவே
அண்மைக் கடற்கரையின் அழகியதோர்
அருமைப் படகினிலே அமர்ந்திருந்து
பெண்மைக் குணம்நிறைந்த பெற்றிமையாள்
பேணும் வடிவழகி உற்றிடவே
உண்மை வழியில்வரும் இன்பமதை
உள்ளம் அறிந்துமிகத் துள்ளியதே

இயற்கை அழகிற்சென்ற எங்களுள்ளம்
இந்தக் கடலைவானம் முத்தமிடும்
மயக்கமிலா வழியைக் கண்டிடவே

மனத்தினில் காதலினைக் கண்டுகொண்டோம்

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/108&oldid=1387868" இலிருந்து மீள்விக்கப்பட்டது