பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கவியரசர் முடியரசன் ஆணைக்கோ அஞ்சித் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்பவன், குடியரசு நாட்டில் வாழத் தகுதியற்றவனாவான். அஞ்சும் வகையாலும் திருந்த முனையாமல், அரசை ஏமாற்றி வாழ்பவர்களும் உண்டு; சட்டத்தின் துணையால் நீதிமன்றங்களில் வழக்காடித் தப்பித்துக் கொள்பவர்களும் உண்டு. இவர்களால் தாயகம் கெடுமே தவிர, உயர்வு பெறவே முடியாது. தம்மைத் தாமே திருத்திக்கொண்டு வாழ்வோராலேதான் குடியரசு மேன்மையுறும். இவ்வாறு திருந்தி வாழும் மக்களைக் கொண்ட நாடுதான் நல்ல நாடென்று போற்றப்படும். நிலவளம், நீர்வளம் முதலிய வளங்கள் மிகுந்து, மனவளங் குறைந்திருந் தால் அது, நல்ல நாடென்ற பாராட்டைப் பெறாது. மன வளந்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்தைக் காட்ட வல்லது. இவ்வுண்மையை நன்குணர்ந்த நம் முன்னோர் "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று மொழிந்துள்ளனர். அதனால், தான் பிறந்த நாட்டுக்குத் தன்னால் ஒரு சிறு தீங்கும் நேர்ந்துவிடாமல் விழிப்பாக இருக்க வேண்டும் எனக் கருத வேண்டும்; உள் நாட்டிலோ வெளி நாட்டிலோ தன்னாட்டிற்குத் தன்னாற் பழிச்சொல் உண்டாகிவிடக் கூடாதே என்ற அச்சவுணர்ச்சி நீங்காதிருக்க வேண்டும். இவ்வண்ணம் ஒவ்வொருவரும் கருதி நடக்க வேண்டும். இதுதான் நாட்டுப்பற்று. இதுவே தாயகத்தைக் காக்கும் பண்பாகும்.