பக்கம்:காகித உறவு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

இரத்தத் துளிகள் பயிராகின்றன


'தப்போ... சரியோ... நிலத்த... ஒங்ககிட்ட கொடுத்தே ஆகணும்."

சட்டாம்பட்டிக்கும் குட்டாம்பட்டிக்கும் முட்டாப் பகை வீராசாமியும் ராஜதுரையும் தங்கள் 'எக்காளத்தை' திருப்திப் படுத்துவதற்காக, ஊர்ச்சண்டையை நடத்தியவர்கள். ஒரு கொலைகூட விழுந்திருக்கிறது. வீராசாமியைவிட எல்லா வகையிலும் வல்லவரான ராஜதுரை, வினைதீர்த்தான் நிலத்தை மலைப்பாம்பின் நோக்கோடு வாங்கிக்கொண்டான்.

இப்போது ஊர்க்காரர்களில் சிலர், வினைதீர்த்தானைச் சாடினார்கள்.

"நிலத்தை ஊரவிட்டு. ஊர்ல போயாடா... விக்கது? சட்டாம்பட்டிக்காரன் கொலகாரப் பாவி... நம்ம வீராசாமிய... கஷ்டப்படுத்துனால்... நாம் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஒன்னால... ரெண்டு ஊருக்கு இடையிலயும் குத்துப்பழி... வெட்டுப்பழி வரப்போவுது."

வினைதீர்த்தான் சிரித்தான். அழுதான்.

வயலில், தன் சொந்த வயலில், கண்மணிபோல் காத்து நெல்மணியில் பட்ட தன் ரத்தம் - சொந்தப் பிள்ளையைப் போல் பாவித்த தன் நெற்பயிர்களில் நீருக்குப் பதிலாகப் பட்ட ரத்தத்துளிகள், வீராசாமியையும், அவன் ஆட்களையும், இந்த விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நில்லாத எல்லோரையும் சும்மாவிடாது என்ற அசுரத்தனமான திருப்தியில், ஆன்மீகக் கோபத்தில் சிரித்தான்.

அதே சமயம், விதைக்கும் போது தந்தையாகவும் நாற்றிடும்போது தாயாகவும், உரமிடும்போது ஆசானாகவும் களையெடுக்கும்போது காவலனாகவும், நீரிடும்போது தோழனாகவும் இருந்து, கண்ணுக்குக் கண்ணாய்ப் பராமரித்த வயலை தன் சொந்த வயலை நினைத்தும் அழுதான். சத்தியம் சத்தம் போடாது என்பதுபோல், அவன் சத்தம் போடாமலே அழுதான்.


***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/98&oldid=1383487" இலிருந்து மீள்விக்கப்பட்டது