பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோயாவாம் தீவினையே

123


ஒழுக்கத்திலிருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வந்தேன். அது அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது.

பழங்காலத்தில் சிறந்தோங்கி வாழ்ந்து காஞ்சி நகரையே தம் கொள்கையின் கீழ் அடக்கிவைத்திருந்த சமணமும் பெளத்தமும் தற்போது அவ்வளவாக இவ்லை. ஊருக்கு வெளியே ‘சீன காஞ்சி’ என்ற கோயில் வேகவதி ஆற்றங்கரையில் உள்ளது. அதன் பொறுப்பாளர் காஞ்சி பச்சையப்பர் பள்ளியில் பணியாற்றிய அப்பாவு நயனார் என்பவராவர். அவர் மகன் ‘பானு’ பள்ளியில் என் மாணவன். எனவே அவர்களோடு அந்தச் ‘சைனர் சினகரத்’ துக்கும் அடிக்கடி செல்வேன். கோயில் பெரியது-துாய்மையானதுபோற்றி வணங்கத் தக்கது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் அக்கோயிலை வணங்காமல் செல்வதில்லை. காஞ்சியின் பல பகுதிகளிலும் ஆழ்ந்திருக்கும் நிலப்பகுதிகளில் சிற்சில சைன பெளத்தச் சிலைகள் இன்னும் அகப்படுகின்றன. மணிமேகலை ‘அறப்பெருஞ் செல்வியாய்’ வாழ்ந்த தெகு அதே பெயரால் இன்றும் வழங்குகின்றதே. ஆயினும் அங்கே பலருக்கு ‘அரப்பணஞ்சேரித்தெரு’ என்றால்தான் புரியும். இவ்வளவு உருமாறியுள்ளது அத்தெருவின் பெயர். இத்தனைச் சமயங்களுக்கிடையிலும் தொன்மைச் சமயங்களாகிய சைவம் வைணவம் இரண்டும் காஞ்சியில் தழைத் தோங்கி நின்றன-நிற்கின்றன-நிற்கும் என்பதும் உறுதி.

காஞ்சியில் சைவ சமயத்தை வளர்க்கப் பல சங்கங்கள் தோன்றி வளர்ந்தன. அவற்றுள் ஒன்று-முக்கியமானது நான் இருந்த காலத்தில் பணியாற்றி வந்தது. அதுவே ‘மெய்கண்டார்’ கழகம் என்பது. சிவஞான போதத்தை உலகுக்குத் தந்த அறிவொளிச் செம்மலின் பெயரால் அக் கழகம் அமைக்கப்பெற்றுச் சிறக்கப் பணியாற்றிற்று. பச்சையப்பரில் பணியாற்றிய திருவாளர்கள் வச்சிரவேலு முதலியார், திருஞானசம்பந்த முதலியார் ஆகியோர் அதன் உயிர் நாடியாக இருந்தனர். பின்னவர் தம் வாழ்நாளே அதற்கே