பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

காட்டு வழிதனிலே

இராகத்தின் துடிப்பு அந்தரங்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கும் நாட்டியக் கலையிற்கண்ட மெளனத்தின் ஆற்றலே வெளியாகின்றது.

ஓவியத்தின் குரலே மெளனம், வர்ண ஜாலங்களே உணர்ச்சிகளைப் பேசுகின்றன. ஓவியன் யாதானுமொரு உணர்ச்சியைத் தோற்றுவிக்கத் தீட்டிய காட்சி அதிற் காண முடியாத ஆழத்தையெல்லாம் மெளனக் குரலினால் நம் உள்ளத்திலே தட்டி எழுப்ப முயல்கிறது. கல்லிலும் மற்ற உலோகங்களிலும் வடித்தெடுத்த சிற்பம் அந்த மெளனத்தின் பேச்சை உள்ளத்திலே ஒலிக்குமாறு செய்ய எழுந்த கனவடிவாகும். உலகம் போற்றும் தில்லைக் கூத்தனது திருவடிவக் காட்சி அவனுடைய திருநடனத்தின் ஒரு நிலையைக் காண்பித்து மற்ற நிலைகளையெல்லாம் நமது கற்பனையிலே உருக்கொள்ளத் தூண்டி மெளனமாய் நிற்கிறது.

கவிதை என்னும் அருங்கலையிலே மேலே கூறிய மற்றக் கலைகளெல்லாம் கலந்து இணைந்திருக்கின்றன. அது சொல்லென்னும் ஒலிச் சேர்க்கையினால் நாட்டியமும் சிற்பமும் காட்டும் உணர்ச்சிக் கோலங்களையும், ஓவியத்தின் வர்ணக் கலவைகளையும் உள்ளத்திரையிலே மின்னும்படி செய்கிறது. சொல்லிலும், சொற் கூட்டத்திலும் எழுகின்ற அந்த இசை ஊற்றும் அதற்கு உறுதுணையாய் நிற்கிறது. ஆகவே முன்பே கூறியது போல உணர்ச்சிகளை முற்றிலும்