பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 காதலும்கல்யாணமும்

“ஆமாம், மூளைதான் கொஞ்சம் பேதலித்திருக்கிறது! இல்லாவிட்டால் என்னை நீங்கள் உங்களுடைய வீட்டுக்கு அழைப்பீர்களா?'-இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்; ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார் அவர். பதில் வார்த்தையாக வரவில்லை; சிரிப்பாகவே வந்தது!

இப்போதுதான் அவளுடைய மன நிலை மட்டுமல்ல, உடல் நிலையும் கெட்டுவிட்டதென்ற உண்மை அவருக்குத் தெரிந்தது. அவளைத் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கொண்டுபோய்க் காட்டினார்.

‘ஏன், என்ன நடந்தது?’ என்று டாக்டர் கேட்டார்; பரந்தாமன் நடந்ததைச் சொன்னார்.

டாக்டர் அவளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘இவ்வளவு நேரம் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள், கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கக் கூடாதா?’ என்று சொல்லிக்கொண்டே, ஒன்றுக்கு இரண்டாக அவள் உடம்பில் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, இரண்டு மாத்திரைகளை வேறு எடுத்து வாயில் போட்டு வெந்நீரை ஊற்றினார்.

சிரிப்பு நின்றது; ஆனால் நிலைகுத்தி நின்ற கண்கள் மட்டும் நிலைகுத்தி நின்றபடியே இருந்தன!

‘சரி, இவளை உடனே வீட்டுக்குக் கொண்டு போய் உடையை மாற்றுங்கள். இரவு முழுவதும் கோதுமைத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுத்துக்கொண்டே இருங்கள்; பொழுது விடிந்ததும் நான் வந்து பார்க்கிறேன்’ என்றார் டாக்டர்.

‘கவலைப்படும் அளவுக்கு ஒன்றுமில்லையே? ‘ என்றார் பரந்தாமன்.

‘இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை; பொழுது விடிந்ததும் சொல்கிறேன்!” என்றார் அவர்.