இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி—24
இடம்:— சம்பந்தம் வீடு.
இருப்போர்:— தங்கவேல், பொன்னன்.
(தங்கவேல், களைப்புடன் காணப்படுகிறான், கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறான். தலையில் கட்டு இருக்கிறது. பொன்னன், ஓசைப்படாமல் உள்ளே நுழைந்து தங்கவேல் எதிரே நிற்கிறான். தங்கவேல் அவனை உட்காரச் சொல்லி ஜாடை காட்டுகிறான்.)
பொ:— பக்கிரி, பூரா விஷயமும் சொல்லியிருக்கும் — என்ன— சொன்னாரா...
தங்:— சொன்னார்...
பொ:— தெரியாமப்படிக்கு, அவசர புத்தியாலே, அக்ரமம் செய்துவிட்டேன், என் கதையே அதுபோலத்தான். பக்கிரிதான், என் கண்ணைத் திறந்தான்...
தங்:— கேள்விப்பட்டேன்...
பொ:— பழய விஷயம் கேள்விப்பட்டிருப்பே...இப்ப, நடந்திருக்கிறது தெரியுமா... தெரிஞ்சிருக்காதே...
(கடிதத்தைத் தங்கவேலிடம் தர, தங்கவேல் அதைப் பார்க்கிறான்.)
ஐயன், சிக்கிக்கிட்டான், சரியா. பக்கிரி யோசனை தான், நானும், கன ஜோரா ஆக்ட் செய்தேன்—பார்த்தயா கடுதாசி... இதை வாங்கிக்கொண்டதும், ஐயனை, வாட்டி வாட்டி எடுத்துவிட்டேன்...ஈட்டி முனையாலே குத்தனாகூட, மனஷன் அவ்வளவு வேதனைப்பட மாட்டான் நான் பேசின பேச்சு, அவனை துளைச்சி எடுத்துவிட்டுது போ.