உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

கொள்வது தெரிந்தால், உண்மை தெரிந்தவன், தடுக்காமலிருக்கலாமா? பாதையிலே படுகுழி இருப்பதைச் சொல்லயாருக்கும் உரிமை இருக்கிறது நீலா! யாருக்கும்! உன் அழகு, யாரையும் மயக்கக் கூடியது தான் — அதிலும் அந்த தர்மன், மதுகுடிக்கும் வண்டுபோல!

சு:— (கேலியாக) அடாடாடா? இவர்தான் ஆடவர் குலத்திலேயே, அப்பு அழுக்கற்றவர்! மது தேடாத வண்டு! வண்டை விரட்டிவிட்டு, மதுவைத் தேடும் தந்திர புத்திதான், உம்மை இப்படிப் பேசவைக்கிறது...

தங்:— (பதறி) ஐய்யோ, ஐய்யோ! நான் சொல்வதை நம்பு நீலா! நம்பு! தர்மனால், நம்பி மோசம்போன ஒரு இளம் பெண்ணின் கண்ணீரை நான் பார்த்தேன்—மாலை சூட்டுவதாகச் சொன்னான்—மங்கையைக் கெடுத்தான்—கைவிட்டு விட்டான்—நீலா! அவளையே இங்கு அழைத்து வருகிறேன்—அவளுடைய பரிதாபகரமான கதையை நீயே கேள்... நீயும் ஒரு பெண்—உன்னைப்போலத்தான் அவளும் அந்த பசப்புக்காரனிடம் மனதைப் பறிகொடுத்தாள்...

சு:— நான் இன்னமும் பறிகொடுக்கவில்லை...பயப்படாதீர்.

தங்:— அப்பா! ஆபத்திலிருந்து தப்ப வழி இருக்கிறது. நீலா! பட்டு என்பவளை அந்தப் பாதகன், ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு, கலியாணம் கிடையாது போ என்று சொல்லி விட்டான். நான் ஆயிரத்தெட்டு காரணத்தைக் காட்டுவது போதாது — ஒரு முறை அந்தப் பெண்ணைப் பாரம்மா, அப்போது உனக்கு தர்மலிங்கத்தின் உண்மையான உருவம் தெரியும்—பட்டுவைப் பாழாக்கிய பாதகன், இப்போது உன்னை வலைபோட்டு பிடிக்கும் வேலையிலே இருக்கிறான் என்று, பட்டுதான் எனக்குச் சொன்னாள்.

சு:— பட்டு என்கிற பெண்ணுக்கும், உமக்கும் என்ன சம்பந்தம்...?

தங்:— நான் இனி உன் அண்ணன் என்று பட்டுவிடம் கூறினேன் நீலா...! சம்பந்தம் என்ன, ஒன்றுமில்லை.. சிறகொடிந்த பறவை! வழியில் கண்டேன், வருத்தமாக இருந்தது...