பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

17


இரண்டு மாடியும் எட்டி இருந்ததால்
மருது,பெண் ணழகை அருகி லிருந்து
காணும் பேறு காணாது வருந்தினான்!
தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச்
சாய லின்பம் தன்னைக் காண்கிலான்!
உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்;
எனினும் அவளின் இதழின் கடையில்
சிந்தும் அழகின் சிறுகோடு காணான்!
அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்!
எடுத்தடி வைப்பாள்,எழிலிடை துவளும்;
துடித்துப் போவான் தூய மருது!
பொழுது மங்கிப் போவதை எண்ணி
அழுதான் மறையுமே அவள் எழில்என்று!
கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்!
பெண்ணழகே எனப் பிதற்றிக் கிடந்தான்.

மறுநாட் காலையில் மருதும் சீனுவும்
பெரிதும் மகிழ்ச்சியடு பேசி யிருந்தனர்.
இடையில் சீனு இயம்பு கின்றான்:
“அவளோ அழகின் அரங்கு! நீயோ
இந்நாள் உற்ற இன்னொரு சேரன்;
ஒத்த வயதும், ஒத்த அன்பும்,
உள்ள இருவரின் உயர்ந்த காதலை
ஓராயிரம் ஆண்டுக் கொருமுறை யாக
இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே!
இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த
“கன்னல்“ என்னும் கசக்கும் வேப்பிலையை
என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு!
மாடியில், நேற்று மாலைநீ கண்ட
ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம்,
அவள் உனக்கேதான் இவண்பிறந் துள்ளாள்;
பச்சை மயிலுக்குப் பாரில்நீ பிறந்தாய்;
அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச்
சொன்னேன்; உன்னைத்தொட அவள் துடித்தாள்.
மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன்
அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்;
அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில்