பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

19


மரத்தின் அருகில் வா’ என்று சொன்னாள்.
என்று சீனுவிடம் இயம்பினான் மருது.
“நன்று நன்று நான் போகின்றேன்”
என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான்.
மாலையில் கதிரவன் மறையும் போதில்
ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன்
இன்பன் வரவை எதிர்சென் றழைக்க
அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப்
பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள்.
கொன்றை யடியில் குந்திக் கன்னலும்
வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச்
சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள்.
மருது விரைவில் வந்து கொண்டிருந்தான்.
ஒருகுரல்! தெளிந்த 'ஏசல்' ஒன்றும்,
பொருளில்லாத புதுக் குரல் ஒன்றும்,
செவியில் வீழ்ந்தன.திடுக்கிட் டவனாய்க்
கன்னல் வந்த காரணம் யாதென
உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான்.
மேலும், “என்வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே“ என்ற
வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான்.
மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை
விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ் மொழி இல்லை!
செழுமலர் இருந்தது திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை!
தணலால் அவனுளம் தாக்கப் பட்டது!
கௌவிய தவனைக் கரிய இருட்டு!
வாழும் நெறியை மருது தேடினான்!
மேலும் — “என் வாழ்வை வீணாக்கிய நீ
ஞாலமேல் வாழுதி நன்றே“ என்ற
கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்!
அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்!
சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!
பொருள் விளங்காமொழி புகலும் ஒருத்தி
இருளில் இட்ட இன்ப ஓவியம்.