பக்கம்:கானகத்தின் குரல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கன்னகத்தின் குரல் இடமிருந்தது. பெரிய லாயங்களும், திராட்சைக் கொடிகள் படர்ந்து ஊழியர்வீடுகளும், வரிசை வரிசையாக ஒழுங்காக அமைந்த புறவீடுகளாகிய விடுதிகளும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் பழமரக்காடுகளும் அங்கே இருந்தன. இவைகளோடு அங்கே பொங்கியெழும் ஊற்றுக்கிணற்றிலிருந்து நீர் இறைக்க எந்திர அமைப்புக்களும், அவற்றின் பக்கத்திலே நீதிபதி மில்லரின் குமாரர்கள் காலையிலும் மாலையிலும் முழுகி விளையாடுவதற்காக சிமென்டால் கட்டிய குளமும் காட்சியளிக்கின்றன. இந்தப் பரந்த நிலப்பகுதியிலே பக் அதிகாரம் செலுத்தியது. அது அங்கேயே பிறந்து அங்கேயே நான்காண்டுகள் வாழ்ந்திருக்கிறது. வேறு எத்தனையோ நாய்கள் அங்கே உண்டு என்பது மெய்தான். இவ்வளவு பெரியஇடத்திலே வேறு நாய்களும் இல்லாமலிருக்க முடியுமா? இருந்தாலும் அவையெல்லாம் ஒரு பொருட்டில்லை. எத்தனையோ நாய்கள் வரும், போகும். ஏதோ சில காலத்திற்கு நாய்ப்பட்டியிலே ஒரு மூலையிலே யாருடைய கவனத்திலும் படாமல் இருக்கும். ஜப்பான் தேசத்தைச் சேர்ந்த ஒரு வகை மொண்ணை மூக்குக் குள்ள ஜாதிநாயான டுட்ஸ், உரோமமில்லாத மெக்சிக்கோ நாட்டு மழுங்கை நாய் இசபெல் ஆகியவையெல்லாம் அப்படித்தான். அவற்றைப் பயமுறுத்தும் வேறு வகை நாய்களும் பத்து இருபதென்றிருந்தாலும் அவற்றோடு பக்கைச் சேர்த்து எண்ண முடியாது. பக் வெறும் வீட்டுநாயல்ல; பட்டிநாயும் அல்ல. அதற்கு நீதிபதியின் இடமெல்லாம் சொந்தம், குளத்திலே அது முழுகிக் களிக்கும். நீதிபதியின் மக்களோடு வேட்டைக்குச் செல்லும். அந்திப்பொழுதிலும், அதிகாலையிலும் நீதிபதியின் குமாரிகளான மாலி, ஆலிஸ் இருவரும் உலாவச்சென்றால், அவர்களுக்குத் துணையாகப் புறப்படும்; குளிர்க் காலத்திலே இரவு வேளைகளில் நீதிபதியின் காலடியில் அவருடைய நூலகத்திலே கொழுந்து விட்டெரியும் கணப்புக்கு முன்னால் படுத்திருக்கும். நீதிபதியின் பேரப்பிள்ளைகள் அதன் முதுகில் சவாரி செய்வார்கள். அவர்களோடு பக் பசும்புல்வெளியே உருண்டு விளையாடும். லாயங்களுக்கு அருகிலோ, பழமரக்கூட்டங்களின் இடையிலோ அவர்கள் துணிந்துபோகும்போது அவர்களுக்குக் காவலாக நிற்கும். மற்ற நாய்களின் மத்தியில் அது கம்பீரமாக நடைபோடும். டுட்ஸ், இசபெல் ஆகிய நாய்களை அது கண்ணெடுத்தும் பாராது. நீதிபதி மில்லரின் இருப்பிடத்திற்கு அதுதானே ராஜா? ஊர்வன, பறப்பன எல்லாவற்றிற்கும் ராஜாவாக அது விளங்கியது. மக்களுங்கூட அதற்கு அடக்கந்தான்.