பக்கம்:கானகத்தின் குரல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 79 வெறுப்போடு பார்த்தன. அவற்றைப் பழக்க பக் விரைவில் முனைந்தது. என்னவெல்லாம் செய்யக் கூடாதென்பதை அவைகளுக்குக் கற்பிக்க அதனால் முடிந்தது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை அவைகளுக்குக் கற்பிக்க முடியவில்லை. வண்டியிழுப்பது அவற்றிற்குப் பிடிக்கவில்லை. கலப்பினநாய்கள் இரண்டையும் தவிர, மற்றவை திகைத்துப்போய்விட்டன. குளிர் மிக்க பனிப்பிரதேசச்சூழ்நிலையும், எஜமானர்களின் கொடுமையும் சேர்ந்து அவற்றை உள்ளமுடையச் செய்தன. கலப்பினநாய் இரண்டிற்கும் எவ்வித உற்சாகமும் கிடையாது. புதிய நாய்கள் பயனற்றவை; தொடர்ந்துசெய்த இரண்டாயிரத்து ஐந்நூறு மைல் பிரயாணத்தால் பழைய நாய்கள் அலுத்திருந்தன. அதனால் இந்தப் பிரயாணத்திற்கு உற்சாகம் கொடுக்கக்கூடியதாக ஒன்றுமே அமைந்திருக்கவில்லை. ஆனால் சார்லஸும் ஹாலும் உற்சாகமாக இருந்தார்கள். அவர்களுக்குத் தற்பெருமையும் இருந்தது. பதினான்கு நாய்கள் பூட்டிய வண்டியில் அவர்கள் போகப் போகிறார்கள். டாஸ்னுக்குப் புறப்படும் வண்டிகள் பலவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அங்கிருந்து வரும் வண்டிகளையும் பார்த்திருக்கிறார்கள். பதினான்கு நாய்கள் பூட்டிய வண்டி அவற்றில் ஒன்று கூட இல்லை. ஆர்க்டிக் பிரதேசப்பிரயாணத்தில் பதினான்கு நாய்கள் பூட்டிய வண்டி இருக்கக்கூடாது; ஏனென்றால், அந்த வண்டியிலே அத்தனை நாய்களுக்கும் வேண்டிய உணவுகளை ஏற்றிச் செல்ல முடியாது. சார்லஸ்-க்கும் ஹாலுக்கும் இந்த விஷயம் தெரியாது. அவர்கள் பிரயாணத்திட்டத்தைக் காகிதத்தில் எழுதிக் கணக்கிட்டுப் பார்த்தார்கள். காகிதக் கணக்குச் சரியாக வந்தது. இத்தனை நாய்களுக்கு இத்தனை நாட்களுக்கு இவ்வளவு உணவு வேண்டுமென்று கணக்கு போட்டார்கள். அவர்கள் போட்ட கணக்கை மெர்ஸிடிஸ் ஆமோதித்தாள். எல்லாம் சுலபமாகத் தோன்றியது அவர்களுக்கு. அடுத்த நாட்காலையில் பக்கின் தலைமையில் அந்த நீண்ட நாய்க் கோஷ்டி புறப்பட்டது. நாய்களுக்கு ஒருவித உற்சாகமும் இல்லை. அலுப்போடு அவர்கள் புறப்பட்டன. அந்த இடத்திற்கும் டாஸ்னுக்கும் இடையேயுள்ள பாதையின் வழியாக நான்கு முறை பக் பிரயாணம் செய்திருக்கிறது. அலுத்தும் இளைத்தும் இருந்த பக்குக்கு அதே பாதையில் மறுபடியும் பிரயாணம் செய்வது கசப்பாக இருந்தது. அதன் உள்ளம் அந்த வேலையில் ஊன்றவில்லை. மற்ற நாய்களின் உள்ளங்களும் அவ்வாறே இருந்தன. புதிய நாய்கள் மருண்டு கிடந்தன. பழைய நாய்களுக்கு அவற்றின் எஜமானர்களிடத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை.