பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XI

யூசுப்கான் முற்றுகையைத் தொடர்ந்தான். ஆயினும் அவனது நிலைமை பலவீனமாகி வந்தது. எனவே தற்போதைக்குப் பின்வாங்குவது நல்லதென்று முடிவுசெய்தான். இக்காலத்தில் டச்சுக்காரர்கள் இலங்கையிலிருந்து வந்து தூத்துக்குடியில் இறங்கினார்கள். ஆழ்வார் திருநகரிக்கு வந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டார்கள். திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டார்கள். பாளையக்காரர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களை விரட்ட யூசுப்கான் பாளையங்கோட்டையிலிருந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்டான். அவன் ஆழ்வார் திருநகரிக்குப் போய்ச் சேர்ந்தபொழுது டச்சுக்காரர்கள் தூத்துக்குடிக்குப் போய் அங்கிருந்து கப்பலேறிப் போய்விட்டார்கள். யூசுப்கானுடைய வெற்றிகளைக் கண்ட பாளையக்காரர்கள் சிறிது காலம் ஓய்ந்திருந்தார்கள்.

திருநெல்வேலிச் சீமையை வென்ற பெருமையைப் பறைசாற்றி இச்சீமையின் வரிக் குத்தகையை 7 லட்சத்துக்குக் கான்சாகிபு கம்பெனியாரிடம் இருந்து பெற்றுக்கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆற்காட்டு நவாப், முகம்மதலியோடு சமாதானம் செய்துகொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டுப் போய்விட்டான். யூசுப்கானது நிலைமை வலுவாக இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாகப் பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படைதிரட்டினான். தனது முற்கால எதிரிகளான பாளையக்காரர்களோடு சமாதானம் செய்துகொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியைக் கோரினான். அவனது தலைமையிலுள்ள வீரர்களின் தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர்அலியிடமிருந்தும் அவன் ராணுவ உதவி பெற்றதாகப் பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோவில்களுக்கும் மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கிக் கல்வெட்டுகளில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி, வாய்க்கால்கள் வெட்டி நிலங்களுக்குப் பாசன வசதிகளைச் செய்து கொடுத்தான். பூலுத்தேவனையும், அவனது நண்பர்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள முயன்றான். இம்முயற்சி வெற்றி பெற்றதா என்ற கேள்விக்கு உறுதியான விடையெதுவும் சொல்லச் சான்றுகள் கிடைக்கவில்லை. அவர்களைப் பல முறை அவன் எதிர்த்துப் போராடியிருக்கிறான். பல முறை அவர்களை அழித்துவிடுவதாகச் சபதம் செய்திருக்கிறான். பல தீமைகளை அவர்களுக்குச் செய்திருக்கிறான். அவனை அவர்கள் பிறவிப் பகைவனாக