பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XIII

ஆனால் இவ்விரண்டு பாளையங்களும் அவனோடு சேர மறுக்கின்றன. திருநெல்வேலிப் பாளையக்காரர்களோடு அவன் பல போர்களைச் செய்திருந்ததால் அவர்கள் அவனுக்குப் பகைவர்களாகவேயிருந்தனர். எனவே அவனைப் பிரிட்டிஷாரும், நாவபும் தாக்கிய பொழுது, அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. தாண்டவராயனைத் தலைவன் எனப் பாடல் கூறிய போதிலும், கான்சாகிபுவின் வீரச் செயல்களையும், அவனது வீரத்தையும் புகழத் தவறவில்லை. இங்கிலீஷ் படைத் தலைவர்களை இப்பாடல் கேலி செய்கிறது. தாண்டவராயனது தந்திரத்தைப் புகழ்ந்து பேசும் இப்பாடல் கான்சாகிபு வீரத்தையும் புகழ்கிறது. இப்பாடல் ஒரு சண்டையை வருணிப்பதால் இச்சண்டையில் பங்கு பெரும் கான்சாகிபுவின் வீரத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்நாட்டுப் பாடகர் அறியாமலேயே கான்சாகிபு இப்பாடலின் வீரத்தலைவனாகி விடுகிறான்.

தெற்குச் சீமையின் அரசியலில் பூலுத்தேவன் முக்கிய பங்கு பெற்றான். வீரத்திலும் அரசியல் சூழ்ச்சியிலும், சிறந்தவனாக இருந்தான். பிரிட்டிஷாரையும், நவாபையும் எதிர்க்கப் பாளையக்காரர்களது அணியைத் திரட்ட முயன்றான். இவற்றை இம்முன்னுரையில் கூறியுள்ளோம். அவனது முடிவு பற்றி அறிந்துகொள்ள உறுதியான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லையென்று முன்பே கூறினோம்.

ஆனால் இப்பாடல், கான்சாகிபு மதுரையில் ஆண்ட காலத்தில் பூலுத்தேவன் ஆற்காட்டில் நவாபின் பணியாளாக வேலை செய்து வந்ததாகக் கூறுகிறது. அவன் வரலாறு முழுவதும் நவாபை எதிர்த்து அவனது ஆட்சியை ஒழிக்க அணி திரட்டுவதாகவே உள்ளது. பலமுறை தோல்வியடைந்த பின்னரும், மீண்டும், மீண்டும் நவாபு எதிர்ப்பு பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வீரத்தோடு போராடிய பூலுத்தேவன் தன் கடைசி நாட்களில் அடிமையாகக் காலங் கழித்ததை நம்ப முடியலில்லை. தாண்டவராயனது சூழ்ச்சியையும், நரித்தந்திரத்தையும் புகழ்ந்து பேசும் பாடகனது மனப்பான்மையில் பூலுத்தேவனும் வீரத்தால் சாதிக்க முடியாததை நவாபைச் சார்ந்து கான்சாகிபைப் பற்றிக் கோள் மூட்டி, அவனை அழிக்கும் தந்திரத்தால் சாதிக்க முயன்றான் என்று கூறுவது பூலுத்தேவனும் தாண்டவராயனைப் போல் அரசியல் தந்திரம் வாய்ந்தவன் எனக் காட்டும் பாடகனது முயற்சியென்று கொள்ள வேண்டும். தவிரவும் கான்சாகிபு இறந்து 3 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டிஷ் தளபதி காம்ப்பெல் வாசுதேவ நல்லூரை முற்றுகையிட்ட பொழுது பூலுத்தேவன் கோட்டையிலிருந்து போராடினான் என்று