பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

இருந்தால் வாருங்கள். இங்கே வாருங்கள். இந்தப் பாம்பு இந்த இடத்தில் போகும்படி விட்டால் மிகப் பொல்லாதது தீங்கு வந்து விடும்” என்று சொல்கிறார்.

"இறைவனுடைய திரு மார்பில் அழகிய மாலை இருக்கிறது. அந்த மாலையோடு மாலையாக அல்லவா தான் இருக்க வேண்டுமென்று இந்தப் பாம்பு போகிறது? அதை விடாதீர்கள்” என்று கூவுகிறார். இறைவனிடம் அம்மையாருக்குள்ள பரிவு அப்படிப் பேசச் சொல்கிறது.

"தகவுடையார் தாம் உளரேல்
தார்.அகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டிர்!”

[தகடு - தகுதி. தார் - மாலை. அகலம் - மார்பு.]

இறைவனுடைய பெருமையையும் வலிமையையும், வலிமையையும் நன்கு அறிந்தவர்தாம் அம்மையார். ஆனால் அவையெல்லாம் இப்போது நினைவுக்கு வரவில்லை. மடியில் பெரிய மாணிக்கத்தை வைத்திருப்பவன் ஏதேனும் செடி அசைந்தாலும் திருடன் வந்து விட்டானோ என்று நடுங்குவான். அந்த மாணிக்கத்தின்மேல் உள்ள பற்றே அதற்குக் காரணம்.

குழந்தை உள்ளே உணவு கொள்வதைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் தாய், “ஏதோ குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது” என்று ஒருவர் சொல்லக் கேட்டால், "ஐயோ! நம் குழந்தைதான் விழுந்து விட்டதோ' என்ற அச்சம் அவளுக்கு உண்டாகும். உள்ளே இருந்த குழந்தை கிணற்றுக்கு எப்படிப் போகும்? கிணறு இங்கே அருகில் எங்கே இருக்கிறது?’ என்றெல்லாம் அப்போதைக்கு யோசிக்கத் தோன்றாது. இது அன்பின் இயல்பு. அறிவு மறைத்து அன்பு தலைப்படும்போது எல்லாம் மறந்து விடும்.