பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

எப்படியும் அவ்விடத்தை விட்டு நீங்கவேண்டும் என்று முடிவு செய்தானதலால் அதற்கு என்ன வழி யென்று ஆராய்ந்தான். “இங்கே இருந்து வியாபாரம் செய்வதோடு, கடல் கடந்து சென்று வாணிகம் செய்ய விரும்புகிறேன். அதில் அதிக ஊதியம் உண்டு” என்று தன் உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் அவன் கூறுவது சரியென்று இணங்கினர். அவனுக்காக ஒரு கப்பலைக் கட்டித் தந்தனர். அதில் அவன் ஏறிக் கடல் கடந்து சென்று வேற்று நாட்டை அடைந்து அங்கே வாணிகம் செய்து செல்வம் சேர்த்தான். பின்பு மீண்டும் தாய்நாடு வர எண்ணிய அவன், காரைக்காலுக்குப் போகாமல் பாண்டி நாட்டில் ஒரு கடற்கரைப்பட்டினம் சென்று அங்கேயே தங்கி வாழலானான், அங்கே கப்பல் வியாபாரம் செய்யும் வணிகன் ஒருவனுடைய பெண்ணை மணந்துகொண்டு வாழ்ந்து வந்தான். தனக்கு முன்பே திருமணம் ஆயிற் றென்பதையும், அந்த மனைவி இன்னாள் என்பதையும் யாருக்கும் தெரிவிக்காமலே இருந்தான். அவனுக்கு இரண்டாம் மனைவியிடம் ஒரு பெண் பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்ற பெயரையே இட்டு அன்புடன் வளர்த்து வந்தான்.

காரைக்காலில் இருந்த புனிதவதியார் தம் கனவனுடைய போக்கை உணரவில்லை. தம் இல்லத்தில் இருந்து அறங்கள் பிறழாமல் ஆற்றி வந்தார். நாளடைவில் பரமதத்தன் பாண்டி நாட்டில் ஒரு நகரத்தில் வாழ்கிறான் என்ற செய்தி உறவினர்களுக்குத் தெரிய, அவர்கள் புனிதவதியாரிடம் தெரிவித்தார்கள். தக்கவர்களை அனுப்பி அவனுடைய நிலையைத் தெரிந்துகொண்டு வரச் செய்தார்கள் அவன் வேறு மணம் செய்துகொண்டு வாழ்வதை அறிந்த போது அவர்களுக்குக் கலக்கம் உண்டாயிற்று. அ‘வன் இருக்குமிடத்தில் இவளைக் கொண்டுபோய் விடுவதே நம் கடமை’ என்று எண்ணிய உறவினர், புனிதவதியாரை ஒரு சிவிகையில் ஏற்றி ஆண்களும் பெண்களும் சூழப் பரமதத்தன் இருந்த ஊருக்குச் சென்றார்கள்.