பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. அடி பொருந்தும் அன்பு


இறைவனை வழிபடுகிறவர்கள் எல்லோருமே ஒரே மன நிலை உடையவர்கள் அல்லர். இறைவனை வழிபட்டால் தமக்கு உலகியல் வாழ்வில் நல்ல வசதிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு உள்ளவர்களே பெரும்பாலும் உலகத்தில் இருக்கிறார்கள். தங்கள் குறைகள் நீங்க வேண்டுமென்றும், தங்கள் பதவிக்கு ஊறு நேராமல் இருக்க வேண்டுமென்றும் எண்ணி, இறைவனைப் பூசிக்கிறார்கள். தம்முடைய பகைவர்கள் அழிய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறவர்களும் உண்டு.

பணக்காரர்களும், பதவியில் இருப்பவர்களும் கடவுளைப் பணிந்தால், அவர்களுக்கு ஏதோ குறை இருக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம். நான் உனக்கு லட்சார்ச்சனை செய்கிறேன். எனக்கு ஒரு பிள்ளை பிறக்க அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று வியாபார முறையில் வேண்டுகிறவர்களையும் பார்க்கிறோம்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் இறைவன். இறைவனை உடம்பினால் வணங்கி, வாயினால் புகழ்ந்து, மனத்தினால் தியானிக்க வேண்டும். அவன் நமக்கு எல்லாவற்றையும் வழங்கிக் காப்பாற்றும் வள்ளல் என்பதை நினைந்து உருகவேண்டும்.

ஒருவன் செய்த நன்றியை மறப்பது, எல்லாப் பாவங்களிலும் கொடிய பாவம் என்று சொல்கிறார்கள்.