பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


ஒன்றுதான்; என்றாலும் எங்கள் செந்திலாண்டவனைப் போல வருமா?" என்பார் பின்கட்டுக்காரர். "ஆயிரம் சொன்னாலும் பழனியாண்டவன்தான் ஆண்டவன்” என்பார் முன்கட்டுக்காரர்.

முன்கட்டுக்காரருக்கு ஓர் ஆண்குழந்தை; மூன்று வயசு. பின்கட்டுக்காரருக்குக் குழந்தை இல்லை. அந்தக் குழந்தையே இரண்டு குடும்பத்தாருக்கும் ஒரு குழந்தையாக வளர்ந்து வந்தது. குழந்தைக்குப் பகல் வேளை உணவு பின்கட்டில்;. இரவுணவும் உறக்கமும் முன்கட்டில். இரண்டு குடும்பத்தினரும் குழந்தையிடம் போட்டி போட்டுக் கொண்டு அன்பு காட்டினார்கள்.

அந்தக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்தது. கொஞ்சம் கடுமையாக இருந்தது. பழனியாண்டவனே, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். நீதான் குழந்தையைக் காப்பாற்ற: வேண்டும்” என்று முன் கட்டுக்காரராகிய குழந்தையின் தந்தை வேண்டிக் கொண்டார்.

பின்கட்டுக்காரர் வந்தார். "என் தாத்தா மிகவும். காய்ச்சலாகக் கிடந்தார். வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள். அப்போது எங்கள் பாட்டி செந்திலாண்டவனை நினைந்து மனமுருகி ஒரு ரூபாய் மஞ்சள் துணியில் முடிந்து நேர்ந்து கொண்டாள். அடுத்த வாரம் தாத்தாவுக்குச் செளக்கியம் உண்டாயிற்று. திருச்செந்தூர் ஆண்டவன் கண்கண்ட தெய்வம். அவனுக்குப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்றார்.

ஆகட்டும்” என்று அசுவாரசியமாகப் பதில் சொன்ன தந்தை தம் குடும்ப வழக்கப்படி பழனியாண்டவனைப் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு ரூபாய் முடிந்து வைத்தார். இது பின்கட்டுக்காரருக்குத் தெரிந்தது. அவர் முன் கட்டுக்காரரோடு பேசுவதை நிறுத்திக் கொண்டார்.