பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


"ஆகவே நான் எப்படிச் சொல்லட்டும்? எல்லாவற்றையும் இறுதிக் காலத்தில் சங்காரம் செய்யும் ஹரன் என்று சொல்லட்டுமா? அல்லது உலகத்தைப் படைக்கும் நான்முகன் என்று சொல்லட்டுமா? இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். அதற்கு எல்லை ஏது? யாராலும் உணர்வரிய, எல்லா வடிவங்களுக்கும் மேலான பரம்பொருள் என்று சொல்லட்டுமா? எப்படிச் சொன்னாலும் பொருந்தும். ஆனால் அவ்வளவோடு நின்றுவிட முடியுமா? வெவ்வேறுவடிவாக வெவ்வேறு பண்புடையவனாக நீ நிற்கும் கோலம் ஒன்றா இரண்டா? உன் குணங்களையும் எண்ணி அளவிட முடியாது; உன் கோலங்களையும் எல்லைகட்டிச் சொல்லிவிட முடியாது; உன்திருநாமங்களையும் எண்ணிக்கையில் அடக்கிச் சொல்லிவிட முடியாது. நான் எப்படிச் சொல்வேன்!” என்றார்.

அரன் என்கோ! நான்முகன் என்கோ! அரிய பரன்என்கோ:

"எப்படிச் சொன்னாலும் தகும்; ஆனால் எப்படி சொன்னாலும் போதாது. முன்பு உன் வடிவத்தையும் பெயரையும் எளிதில் சொல்லி விட்டேன். அன்று என் பார்வை குறுகியதாக இருந்தது. இன்று எப்படிச் சொல்வது என்று தெரியாமல் மயங்குகிறேன்” என்கிறார்.

அரன் என்கோ? நான்முகன் என்கோ! அரிய
பரன் என்கோ? பண்புணர மாட்டேன் முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யான் அவனை எம்மானை இன்று.

[வலிமை அழியும்படி இராவணனைத் தன்னுடைய திருவடியிலுள்ள கட்டை விரலால் அடர்த்தவனை, இறைவனாகிய அவனை, என் தலைவனை இன்று அடியேன், அவன் பண்பை உணர மாட்டாதேன், அரன் என்பேனா? பிரமதேவன் என்பேனா? யாவர்க்கும் அரிய சர்வ சூட்சுமப் பொருளான பரம்பொருள் என்பேனா?