பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26. தொங்கும் பொருள்கள்



சிவபெருமானுடைய திருமேனி செவ்வண்ணமாக இருக்கும். "பவளம் போல் மேனி” என்று அப்பர் சுவாமிகள் பாடுவார். அதுவே செம்பொன்மயமாகச் சோதி விட்டு விளங்கும். "பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்" என்று பொன்வண்ணத்தந்தாதி கூறும்.

இறைவனுடைய திருமேனி பொன் போன்றதுதான். பொன்னை விரும்பாதவர் யார்? அவனுடைய பளபளப்பான திருமேனியின் பேரழகைக் கண்டு தாருகாவனத்து முணிபுங்கவர்களின் மனைவியரே மயங்கினர். அழகருக்கெல்லாம் அழகனாகக் காட்சி கொடுக்கிறவன் அவன், "சிவம் ஸுந்தரம்” என்று பேசுகிறது மறை. "கண்ட கண்கொண்டு பின்னைக் காண்ப தென்னே?” என்று நாவுக்கரசர் மயங்கிப் போவார்.

உள்ளத்திலே தூய்மையை உண்டாக்கி மனோலயம் உணடாகும்படி செய்யும் சாந்தமான பேரழகு படைத்தவன் சிவபெருமான். அதனால் மதுரையில் எழுந்தருளும் அவனுக்குச் சுந்தரேசன், சொக்கநாதன் என்ற திருநாமங்கள் உண்டாயின. "புக்கு வந்தார் தம்மேற் பொடிபோட்டுள மயக்கின், சொக்கலிங்கம் என்றெவரும் சொல்லாரோ?" என்பது தமிழ்விடுதூது.

இத்தகைய திருமேனியைக் கூர்ந்து பார்த்தால் சற்றே அச்சம் உண்டாகிறது, அழகைக் கண்டு மனம் மயங்கும். அந்தக் கவர்ச்சிக்குத் தடையாக எம்பெருமானிடம் சில உறுப்புக்களும் பொருள்களும் இருக்கின்றன. அவனை

நா.—12