பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. நீலகண்டன்


இறைவனுடைய நீலகண்டத்தையே அவர் கண்கொட்டாமல் பார்த்தார். சிவபெருமானுடைய திருமேனி ஒரே சிவப்பு "சிவமெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்" அல்லவா? செக்கச்செவேல் என்ற திருமேனியிலே இந்த நீலத் திருக்கழுத்து எடுப்பாகத் தோன்றுகிறது. மையின் நிறம் கழுத்தை விடாமல் பின்னிப் பிணைத்துக் கொண்டு நிற்கிறது. 'மைஞ்ஞான்ற கண்டம்' அது. அதன் நிறம் நன்றாகத் திகழ்கிறது

அந்தக் கழுத்தின் கருமை ஒரு கதையையல்லவா சொல்லுகிறது? தேவர்கள் எல்லாம் தாம் என்றும் சாவாமல் இருக்க வேண்டும் என்ற ஆசையினால் அமுதம் பெற எண்ணினார்கள். பாற்கடலைக் கடையப் புகுந்தார்கள். எல்லாத் தேவர்களும் அமுதம் கிடைக்கும் என்ற அவாவினால் மிகவும் ஊக்கத்தோடு பாற்கடலைக் கடைந்தார்கள். 'ஒரு பெரிய காரியத்தைச் செய்யப் போகிறோமே; இதற்குப் பெரியவர்கள் ஆசியைப் பெற வேண்டாமா? நமக்கெல்லாம் பெருமானாகிய மகாதேவனை வணங்கி இதைச் செய்யலாமே!’ என்ற எண்ணம் அவர்களுக்குச் சிறிதும் உண்டாகவில்லை. தம்முடைய வலிமையினால் அமுதத்தைக் கடைந்து உண்டு சாவா நிலைபெற்று வாழலாம் என்று கனவு கண்டார்கள்.

பாற்கடலைக் கடைந்தார்கள். மந்தரத்தை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கி ஒருபக்கம் தேவர்களும் மற்றொரு பக்கம் அசுரர்களும் பிடித்துக் கடைந்தார்கள். ஆம், அசுரர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். எப்போதுமே