பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

"அவர் சோதிவடிவினராயிற்றே சுடர் உருவினர் அல்லவா?”

“சுடர் உருவினரா? தூய சுடர் உருவினராக இருந்தால் நன்றாக இருக்கும். அந்த உருவில் எலும்பு மாலையை அல்லவா அணிந்திருக்கிறார்? அவருடைய கோலத்தை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. எலும்பு மாலையைக் கணமாவது கழற்றி வைக்கக் கூடாதா? அது என்ன மலர் மாலையா? காசு மாலையா? இந்த எலும்பணிந்த கோலத்தை மதித்து நம்பிக்கை வைக்கிறாயே!”

“என்னுடைய அன்பு நீ சொல்லும் எதையும் எண்ணவில்லை. இது கிடைக்கும் என்று எதிர்பார்த்து வைக்கும் அன்பு அன்று அது.”

"அவர் கோலந்தான் பயங்கரம் என்றால் அவர் ஆடும் இடம் எது தெரியுமா? ஒரே பேய்க் கூத்து, நெருப்பில் நின்று ஆடுகிறார். ஈமக்காட்டில் எலும்பு மாலையை அணிந்து எரியில் ஆடுகிறாரே நினைத்தாலே அச்சம் உண்டாகிறது. அவரையா அணுகி அன்பு செய்வது?”

“எப்படி இருந்தாலும் அவரே எனக்குத் தலைவர்; உடையவர்; எம்மானார். அவர் எந்தக் கோலத்தில் இருந்தாலும் எதை அணிந்தாலும் எங்கே நடனம் ஆடினாலும் என் நெஞ்சம் அவரையே பற்றி அன்பு செய்கிறது. அவர் இடர் களையாமல் இருக்கட்டும். என் நெஞ்சம் அவர்பால் உள்ள அன்பைக் களையாது. எமக்கு இரங்காமல் கல் நெஞ்சராக இருக்கட்டும். அதனால் என் நெஞ்சம் கல்லாகாது. அது அவர்பால் உள்ள அன்பினால் நெக்குருகும். படரும் நெறி பணியாமல் இருக்கட்டும். என் நெஞ்சம் அன்புப்பாதையில் செல்வதினின்றும் ஒழியாது.”

காரைக்கால் அம்மையார் இப்படிச் சொல்கிறார். அவர் பேய்வடிவம் தாங்கியவர். அவருக்கு என்பறாக்கோலமும் எரியாடுவதும் அச்சத்தை உண்டாக்குமா?