பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289

களை ஒட்டிப் பார்ப்பது முறையன்று. அவன் திருவுள்ளத்தை யார் அறிவார்கள்?.

தன் குழந்தையாகிய ஆருயிர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்தவன் அவன். “வேண்டத்தக்க தறிவோய்நீ” என்பது திருவாசகம். தனக்கு இன்னது வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா? தான் இன்னது செய்ய வேண்டும், இன்னது செய்யக்கூடாது என்று அறியாதவனா அவன்? அறிவாளிகள் செய்யும் சில காரியங்களுக்குரிய காரணம், நமக்குப் புலப்படுவதில்லை. புறத் தோற்றத்தைக் கொண்டு அறிவிலே குறைந்தவர்கள் அவர்கள் செயலுக்கு மாசு கற்பிக்கலாம். அது அவர்களுடைய அறியாமையால் விளைவது. அறிவாளிக்ளின் செயல்களுக்குத் தக்க காரணம் இருக்கும்.

முற்றறிவினனாகிய இறைவன் செய்யும் செயல்களுக்குத் தக்க காரணம் இருக்க வேண்டும். நமக்கு அந்தக் காரணம் தெரியாமையால் அவன் செய்வது தவறு என்று சொல்ல தமக்குத் தகுதி இல்லை. நமக்குக் காரண காரியங்கள் எல்லாம் தெரியுமா? நம்முடைய செயல்களுக்கே பல சமயங்களில் காரணம் புரிவதில்லையே! இறைவன் செயலின் காரணத்தை அறியும் அறிவு நமக்கு ஏது?

இப்படியெல்லாம் சிந்தனையை விரித்த அம்மையார் ஒரு முடிவிற்கு வருகிறார். அவனுக்குத் தெரியும், தனக்கு எது தக்க செயலென்று. காரணம் தெரியாமல் இருப்பது நம் குறையே அன்றி அவன் குறை அன்று. தனக்கு எது முறையென்பதைத் தானே அறிவான்.

தானே அறிவான் தமக்கு

அவன் செயலைப் பற்றிக் குறை கூற நாம் யார்? அந்த வானவர்களுக்குத்தான் என்ன தகுதி இருக்கிறது?. அவர்கள் எவ்வளவு ஒளியுடையவர்களாக இருந்தால்தான் என்ன?" பேரொளிப் பிழம்பாகிய இறைவன் முன் அந்த ஒளி எம்மாத்திரம்?

நா.—19