பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

செய்தவர். அவருடைய வாழ்வு, அவனை அடைந்த பிறகே உண்மையான வாழ்வாயிற்று. அடைய வேண்டிய இடத்தை அடைந்து விட்டோம் என்ற மன நிறைவு அவருக்கு ஏற்பட்டது.

இறைவன் பெருமைகளையெல்லாம் உணர்ந்தார். அவன் கல்யாண குணங்களையும், அவற்றுக்குள் சிறந்து நிற்கும் கருணையையும், அவன் குறைவிலா நிறைவுடையவன் என்பதையும், பதவிபெற்றார் எல்லோரும் அவனுடைய அருளால் பிழைக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தார். அவனையன்றிப் புகலிடம் வேறு இல்லை என்று தெளிந்தார். அவன் அடிக்கே ஆளானார். அதன்பின் அவருடைய வாழ்வு வாழ்வாயிற்று. இப்போது அவர் வாழ்கிறார்.

தனக்கே அடியனாய்த்
தன் அடைந்து வாழும்
எனக்கே.

இந்த வாழ்வு நிறைவு பெற்றதா? வாழாத வாழ்வு வாழாமல் உண்மையான வாழ்வு வாழத் தலைப்பட்டார். அம்மையார்.

இத்தனையும் இறைவன் திருவருளால் அமைத்தனவே. ஆனால் இது போதுமா? அவன் அருளை முற்றப் பெற வேண்டாமோ?. அவனுடைய பெருங் கருணையிலே முக்குளித்துத் தம்மை இழக்க வேண்டாமோ? எல்லாம் இழந்து நிற்கும் நிலையைப் பெற வேண்டாமோ?

‘அத்தகைய நிலை பெறுவதற்குரிய அருளை வழங்க வில்லையே’ என்று ஏங்கித் தம் ஏக்கத்தை இறைவனிடம் முறையிடுகிறார். "எத்தனையோ பேருக்கு முழு அருளைத் தந்திருக் கிறாயே! உன்னையன்றிப் பிறர் யாரையும் அடையாமல், இருக்கும் எனக்கு மட்டும் இன்னும் அந்த அருளை வழங்காமல் இருக்கிறாயே! அவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன?