பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

போர்க்களத்துக்குப் போய்ச் சண்டை போடுவார்கள். அங்கே பெண்களை அழைத்துச் செல்லலாமோ?

சிவபெருமான் கோயிலிலும் வீதியிலும் தேவலோகத்திலும் கைலாசத்திலும் உலா வரும்போது உமாதேவியோடு போவது பொருத்தமான காரியம். அப்படிப் போவதனால் அன்பர்கள் அருள் பெறுகிறார்கள். ஆனால் அப்பெருமான் அந்த இடங்களுக்கு மட்டுமா போகிறான்: அவன் சுடுகாட்டுக்குக்கூடப் போகிறான். நல்ல இராத்திரி வேளையில் அங்கே போகிறான். தீக்கு நடுவில் ஆடுகிறான். அவனோடு அங்கே இருப்பவர்கள் யார்? பேய்கள். ஆடும் ஈமத்தில் தீயில் அவன் ஆடுகிறான்.

அவன் ஆடட்டும்; அதைப்பற்றிக் குறை கூற நாம் யார்? அங்கே பெண்கள் போகலாமோ? சுடுகாட்டில் நள்ளிரவில் பேய்க்கு நடுவே அழகான பெண்ணை அழைத்துக் கொண்டு போகலாமோ? அந்தப் பெண் அஞ்சமாட்டாளோ? அவன் அவளை அழைத்துக்கொண்டு போகிறான் என்பதைக் கேட்டாலே நமக்குக் குலை நடுங்குகிறதே!

பட்டப்பகலில் அழகான மண்டபத்தில் அரம்பையர்கள் கவரி வீச மாணிக்கச் சிங்காதனத்தில் தன்னுடன் வீற்றிருக்கச் செய்து, எல்லாரும் இந்தத் திவ்ய தரிசனத்தைக் கண்டு பூரித்து அருள் பெறும்படி செய்வதுதானே முறை? அதை விட்டுவிட்டுப் பயங்கரமான நள்ளிரவில், நினைத்தாலே அச்சத்தை உண்டாக்கும் சுடுகாட்டில், கண்டால் கதிகலங்கும் பேய்கள் ஆடுகின்ற சூழ்நிலையில், நெருப்புக்கு நடுவிலே இறைவன் தாண்டவம் ஆடும் போது அம்பிகையை அங்கே நிற்க வைக்கலாமோ? அந்த இடத்துக்கு அவன் அவளை அழைத்து செல்லலாமோ?

அவள் அஞ்சமாட்டாளா? அந்தப் பெருமாட்டியின் அழகைப் பார்த்து மகிழ அங்கே யார் இருக்கிறார்கள்?