பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

‘அவர்க்கு அல்லால் மற்றொருவர்க்கு எஞ்ஞான்றும் ஆள் ஆகாப்போம்’ என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். எஞ்ஞான்றும் என்பது எழுவாய்; போம்: பயனிலை, வேறு ஒருவருக்கு ஆளாகமலே எல்லா நாட்களும் கழியும் என்பது பொருள்.

ஒருவருக்கே ஆளாவதும், அவருக்கே அன்புடையராவதும், அவரையன்றி வேறு யாரையும் மனத்தால் நினையாமல் இருப்பதும் உயர்ந்த பக்தியின் மூன்று படிகள். இந்த நிலைகளை இந்தப் பாட்டில் அம்மையார் காட்டுகிறார்.

“அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்; என்றும்
அவர்க்கோநாம் அன்பாவது; அல்லால்—பவர்ச்சடைமேல்
பாதுகாப்போழ் சூடும் அவர்க்(கு) அல்லால், மற்றெருவர்க்(கு) ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்”

[கொடியைப் போலத் தோன்றும் சடையின்மேல் பகுத்த துண்டமாகச் சந்திரனின் பிளவாகிய பிறையைச் சூடும் அந்தச் சிவபெருமானுக்கே ஏழு வகையான பிறவிகளிலும் யாம் அடிமையாக இருப்போம்; எப்போதும் அவருக்கே நாம் அன்பராவது; இப்படி அன்றி அவருக்கல்லாமல் வேறு ஒருவருக்கு எந்த நாளும் ஆள் ஆகாமல் கழியும்.]

செய்யுளாதலால் சுட்டு முன் வந்தது. ஏகாரங்கள், பிரி நிலை; அன்பு ஆவது-அன்பராவது; குணத்தைக் குணியாகச் சொன்ன உபசார வழக்கு; பவர் - கொடி, பாகு - பகுத்தபாகம். போழ்-பிளவு; இங்கே சந்திரனுடைய பிளவாகிய பிறை, ஆகாப்போம்-ஆகாமற் போகும்; தொகுத்தல் விகாரம்.