பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464

தம்முடைய உயர்ந்த பதவிச் செருக்கால் இறுமாந்து நிற்கும் அவர்கள், இறைவன் திருவருளே காரணம் என்பதை உணர்ந்து அவன் முன் விழுந்து திருவடிகளிலே முடி பணிய வணங்குகிறார்கள். பணிவைக் காணும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் பணிவினால் திருவடிகளுக்கு அல்லவா இன்னல் உண்டாகிவிட்டது? அந்த அடிகளில் தேவர்களின் முடிகளின் தழும்புகள் ஏறிப் பார்க்கப் பொறுக்க முடியவில்லையே!

இப்படி எண்ணி வருந்துகிறார் அம்மையார்.

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடம் தேய்ப்ப—முசிந்து எங்கும்,
எந்தாய்! தழும்புஏறி ஏபாவம்! பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி!

எங்கள் தந்தையே, வானத்தில் வாழும் நியமனத்தையுடைய தேவர்கள் கீழே விழுந்து தம்முடைய தூய பொன்னும் மணியும் கொண்டு சமைத்தக் கிரீடங்களைப் படியும்படி தேய்ப்பதனால், உன்னுடைய அழகிய தாமரையைப் போலத் தோற்றம் அளிக்கும் திருவடிகள் நலிவு பெற்று, எங்கும் தழும்பு ஏறிக் காண்பதற்கு அழகற்றவனாக இருக்கின்றனவே அந்தோ பாவம்!

[விசும்பு-வானுலகம், விதி-இறைவனால் ஆணையிடப்பட்ட முறை. முன்னால் விசும்பு என்று வந்தமையால் பின் நின்ற விண்ணோர் என்பது தேவர் என்னும் துணையாக நின்றது. பணிந்து-கீழே விழுந்து; திருவடியில் முடிசாய்த்து வணங்கி; மணிமகுடம் தேய்ப்ப என்றதனால் அடியில் வீழ்ந்து வணங்கியது புலனாகிறது. பசும்பொன்-கலப்பில்லாத பொன்; செம்பைக் கலந்து அணிகளைச் செய்யும்போது அது செம்பொன் ஆகிறது; இங்கே பசுமை மஞ்சள் நிறத்தைக் குறிக்கிறது. பொன்னில் மணியைப் பதித்துப் பதித்துச் செய்த மகுடம் அவை; மணிகள் கற்களைப் போல உறுத்தித்