பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

“பிறவிப் பெருங்கடல்”

என்பது திருக்குறள்.

“தனியனேன் பெரும்பிறவிப் பெளவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு”

என்று பாடுபவர் மணிவாசகர்.

ஃஃஃ

இறைவன் இவ்வாறு பொதுவாக, எல்லா உயிர்களையும் சுழற்றி விட்டாலும் சில உயிர்களுக்குச் சிறப்பான நலத்தைச் செய்கிறான். மற்ற உயிர்களைப் போலப் பிறப்பதும் உலகியலில் சிக்கித் தடுமாறுவதும் இறப்பதுமாக இராமல், தமக்கு என்றும் உறவாக உள்ளவன் இறைவன் என்பதை, அந்த உயிர்கள் உணர்கின்றன.

இறைவனுடைய உண்மையை உணர்ந்த மெய்யன்பர்களே அவ்வுயிர்கள். தம் உடம்பை, நம் கண் காணத்தந்த தந்தை, இங்கே இருந்தாலும் உண்மையாகத் தம் பிறப்புக்கு மூல காரணமாக இருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கும் உடம்புக்கு ஏற்றபடி ஒவ்வொரு தகப்பன் அமைகிறான். இறைவனே எந்தப் பிறவியிலும் நமக்குத் தந்தையாக இருக்கிறான்.

தந்தை, தன் மகன் அறிவுடையவனாகத் திகழ வேண்டுமென்றும், நன்றாக வாழவேண்டுமென்றும் எண்ணி அவனுக்கு வேண்டியவற்றை யெல்லாம் தருகிறான். மகன், தந்தையின் விருப்பப்படி ஒழுகாவிட்டால் அத்தந்தை அவனே ஒறுத்து நல்ல வழியில் நிற்கச் செய்கிறான். மகனை ஒறுக்கும் தந்தையைப் பார்க்கும் போது, அவன் கொடியவனாகத் தோன்றுகிறான். ஆனால் தந்தையின் நோக்கம், மகனைத் திருத்த வேண்டும் என்பதுதான்.