பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82. அடியார்களின் நிலை


சிவபெருமான் திரிபுரங்களை அழித்தவன். இரும்பு, வெள்ளி, பொன் ஆகிய மூன்றினாலும் அமைந்த கோட்டைகளையுடைய மூன்று புரங்களில் வாழ்ந்த வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்ற மூன்று அசுரர்கள் உலகத்தை நலிந்து வந்தார்கள். பறக்கும் கோட்டைகளாகிய அவை திடீரென்று எங்கேனும் வந்து படியும். அவற்றின்கீழ் அகப்பட்டவர்களெல்லாம் நசுங்கி மடிவார்கள். இவ்வாறு மக்களை அழிப்பதில் இன்பம் கண்டார்கள், அந்த அசுரர்கள்.

அவர்கள் செய்த கொடுஞ் செயல்களைப் பொறுக்காமல் தேவர்கள் கிவபெருமானிடம் முறையிட்டுக் கொண்டார்கள். இறைவன் மேருவையே வில்லாகவும் வாசுகியையே நாணாகவும் திருமாலையே அம்பாகவும் கொண்டு, பூமியாகிய தேரில் ஏறி, நான்முகன் சாரதியாக இருந்து அதைச் செலுத்தப் புறப்பட்டான். திரிபுரங்களை அணுகியபோது அம்பாக இருந்த திருமாலுக்குச் சிறிதே அகங்காரம் தோன்றியது. 'தாம் அம்பாக இருந்து திரிபுரங்களை அழிக்கப் போகிறோம். திரிபுர சங்காரத்தில் நம்முடைய பங்கே தலைமையானது' என்ற அகந்தை அவருக்கு உண்டாயிற்று. அதை அறிந்த சிவபெருமான் அவருடைய பேதைமையை எண்ணிச் சிரிப்பது போலப் புன்னகை செய்தான். அந்தப் புன்னகையின் ஒளியே திரிபுரங்களை எரித்துவிட்டது. மற்ற யாருடைய துணையையும் வேண்டாமல் தன்னுடைய சிரிப்பினாலே இறைவன் திரிபுர சங்காரம் செய்து விட்டான். இது வரலாறு.