பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

493

இருவகை வினைகளும் இல்லாமல் அவற்றை அடியோடு அறுத்து விடுவார்கள்.

மேலை இருவினையும் வேரறுத்தோம்.

காலபயம் இல்லாமலும் நரகத்தின் வாசனையே படாமலும் பிறப்புக்குக் காரணமான வினைகளால் நலிவுறாமலும் உள்ள நிலை சீவன் முக்த நிலை. இறைவனுடைய பக்தர்கள் முக்தர்களாகத் திகழ்வார்கள். காரைக்காலம்மையார் அந்த நிலையில் உள்ளவர். ஆதலால் அவர் செம்மாப்புடன் இருப்பவர்.

காலனையும் வென்றோம்
கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும்
வேர் அறுத்தோம்:-கோல
அரணார் அவிந்து அழிய
வெந்தீஅம்பு எய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

பார்ப்பதற்கு அழகாக இருந்த கோட்டைகளாகிய திரிபுரங்களை உடைய அசுரர்கள், தம் ஊக்கம் குலைந்து இரங்கும் படியாக, அந்தப் புரங்களை வெவ்விய தீயைக் கக்கும் ஓர் அம்பினால் எய்து அழித்த சிவபெருமானுடைய திருவடிகளைப் பற்றாகப் பற்றி, யாம் காலஜயம் பெற்றோம்; கடுமையான நரகாநுபவத்தினின்றும் விலகி நிற்கிறோம்; முன்புள்ள சஞ்சித வினையையும் இப்போது சேரும் ஆகாம்ய வினையையும் வேரோடு அறுத்துவிட்டோம்.

[காலனையும்: உம்மை உயர்வு சிறப்பு; எண்ணும்மையாக வைத்து, கடுநரகத்தையும் என்று உம்மையை வருவித்து முடிப்பதும் ஒன்று. கடுநரகம் என்பதில் உள்ள கடுமை இனத்தைச் சுட்டாமல், அதன் இயல்பைச் சொல்லியது.