பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

உழன்று கொண்டிருப்பார்கள். அவர்கள் இறைவனை நெருங்கி உணர்வதில்லை. அவ்வாறு இருப்பவர்களுக்கு அந்தச் சடைகள் தீயைப் போலத் தோன்றுமாம். தீ, கொடி விட்டது போலப் பறந்திருந்தால் எப்படியோ அப்படி அந்தச் சடைகள் காட்சி அளிக்கும்.

சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின்
பெற்றியவாம்.

தீயைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவர்களைப் போல அவர்கள் ஒதுங்கி நிற்பார்கள். செம்பொன்னின் ஒளியைக் கண்ணை அகல விழித்துக் கண்டு இப்படி ஒரு பொருள் நேர் பட்டதே என்று வியந்து கைக்கொள்வர்கள் அறிவுடையவர்கள். நல்ல பார்வையின்றி ஒளி குறைந்த கண்ணோடு உள்ளவர்கள் அந்தச் செம்பொன்னின் ஒளியை நன்றாகப் பார்க்க முடியாமல், அது கண்ணக் கூசச் செய்யும் நெருப்பு என்று அஞ்சி விலகிச் சென்று ஏமாந்து போவார்கள். கண் இருந்தும் குருடர்களாகவும், பொன்னை அணுகியும் அதன் அருமையை அறியாத பேதையர்களாகவும் அவர்கள் திரிவார்கள். இறைவனைச் சாராதவர்கள் மெய்ப்பொருளை அறியும் அகக்கண் மழுங்கியவர்கள். கண்நோய் உள்ளவர்கள் ஒளியைக் கண்டு கண்ட அதை அணுகாமல் ஒளி இல்லாத இடத்தை நாடிச் செல்வது போல, அகக் கண்ணின் ஒளி படையாதவர்கள் இந்தச் செம்பொன்னை அணுகக் கூசி எங்கெங்கோ போவார்கள். அவர்கள் இறைவன் சடையைத் தீக்கொடி போலக் கண்டு விலகிச் செல்பவர்கள்.

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே
ஒத்து இலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின்
பெற்றியவாம்;—நேர்ந்துஉணரின்
தாழ்சுடரோன் செங்கதிரும்
சாயும் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.