பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85. மூன்று கண்கள்


சிவபெருமான் மூன்று கண்களை உடையவன். பிறரெல்லாம் இரண்டு கண்களே படைத்திருக்க அந்தப் பெருமான் நெற்றியில் குறுக்கே தோன்றும் மூன்றாவது கண்ணை உடையவனாக இருக்கிறான். "நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையார் போலும்” என்று அப்பர் பாடுவார். மற்றக் கண்களைப்போல இராமல் அது வேறு வடிவில் இருப்பதனால் சிவபெருமானுக்கு ‘விரூபாட்சன்’ என்ற திருநாமம் உண்டாயிற்று.

அந்த மூன்றாவது கண் எப்போதுமே திறந்திருப்பதில்லை. வேண்டும்போது திறந்து ஆற்ற வேண்டியதை ஆற்றும். அந்தக் கண் ஞானக்கண். அதை உடைய பெருமான் பேராற்றல் உடையவன். “நெற்றிமேல் கண்ணை உடையவனோ?” என்று உலக வழக்கில் கேட்கும் கேள்வி அதைப் படைத்தவன் பிறருக்கு இல்லாத ஆற்றலை உடையவன் என்பதைக் குறிப்பிக்கும்.

ஒரு காலத்தில் மூன்று அசுரர்கள் மூன்று பறக்கும் கோட்டைகளை உடையவர்களாய் ஊருக்குத் தீங்கு இழைத்து வந்தனர். அந்த மூன்று புரங்களையும் இறைவன் அழித்தான். அதனால், ‘திரிபுராரி’ என்ற திருநாமம் அவனுக்கு அமைந்தது.

திரிபுர சங்காரம் எவ்வாறு நடந்தது? பல வேறு வகையில் நிகழ்ந்ததாக அருளாளர்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். அம்பை எய்து அழித்தான் என்றும், விழித்து எரித்தான் என்றும், சிரித்து எரித்தான் என்றும் மூன்று வேறு வகையில் சொல்வதுண்டு. சிரித்து எரித்தான் என்பதே பெருவழக்கு.