பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45



"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை”

என்று வள்ளுவர் கூறுவர். எதையும் வேண்டாமையாகிய நிராசையே ஞானத்தை உண்டாக்கும். ஆனால், பிறவாமை வேண்டும் என்ற ஆசை உலகப் பொருள்களில் வைக்கும் ஆசையைப் போன்றது அன்று.

'பிறப்பை அறுக்க வேண்டும்' என்ற எண்ணம் எல்லாவற்றினும் சிறந்த எண்ணம். இறைவனிடம் வேண்டிக் கொள்வனவற்றில் மிகச் சிறந்த வேண்டுகோள் இது.

"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து.
தம்மைஎல்லாம் தொழவேண்டிச்
சூழ்த்தமது கரமுரலும்
தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான்
யானும்உன்னைப் பரவுவனே.”

என்று பாடுவார் மணிவாசகப் பெருமான்.

பிறப்பறுக்க வேண்டும் என்ற எண்ணமே மீதுார்ந்து நெஞ்சத்தில் எழுமானால் அந்த நெஞ்சம் நல்ல நெஞ்சம். காரைக்காலம்மையார். 'என் நெஞ்சே நன்னெஞ்சம்' என்று சொன்னவர். அதற்குக் காரணம் இன்னதென்று புலப்படுத்துகிறார்.

"யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்"

"நான் தொடர்ந்து அநாதியாக வரும் பிறப்பை அறுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டேன். அந்த் எண்ணம் உண்டான நெஞ்சம் நன்னெஞ்சம்” என்று இணைத்துக்கொள்ளும்படி அடுத்தடுத்து வைக்கிறார்.