பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

"அத்தகைய அம்மானுக்கு ஆளாயினேன்” என்று காரைக்காலம்மையார் சொல்கிறார். பல பிறவியிலும் தவம் செய்து அதன் பயனாகச் சத்துவகுணம் ஓங்கி நிற்கும் நெஞ்சத்தைப் பெற்று, அதன் பயனாகப் பிறப்பை ஒழிக்கும் இச்சை சிறந்து, இறைவனடிக்கு ஆளானால், பிறப்பற்ற நித்திய சுகம் கிடைக்கும். இதையே ஒரு பாட்டால் அம்மையார் சொல்கிறார்.

"யானே தவம்உடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்;
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்:-யானே
அக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான்,வெண்ணீற்ற
அம்மானுக்(கு) ஆளாயி னேன்.”

[யான் தவம் உடையேன்; என் நெஞ்சு நல்ல நெஞ்சு, யான் பிறப்பறுக்க எண்ணினேன். யான் அந்த யானை உரியைப் போர்த்த நெற்றிக் கண்ணனும் வெண்ணீற்றை அணிந்த பெருமானுமாகிய சிவபெருமானுக்கு ஆளாகி விட்டேன்.

ஏகாரங்கள், தேற்றம். பிறப்பறுப்பான் - பிறப்பை அறுக்க. அ: உலகறி சுட்டு, கைம்மா-துதிக்கையையுடைய விலங்கு, யானை. உரி-தோல், சுஜாசுர சங்காரம், இறைவன் செய்த எட்டு வீரச்செயல்களுள் ஒன்று. வெண்ணீற்ற-வெண்ணீற்றை அணிந்த. அம்மான்-தலைவன்.]

இது அற்புதத்திருவந்தாதியில் 7-ஆவது பாட்டு.