பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

"சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே யாம்என்றும் மீளா ஆளாக்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினேமே”

என்று அப்பர் பெருமிதத்தோடு சொல்வார். அந்த நிலை எல்லோருக்கும் எளிதில் வந்துவிடுமா? ஆகவே,

"ஆயினேன் ஆள் அவனுக்கு”

என்று காரைக்காலம்மையார் சொல்லும்போது, உலக முழுவதுமே எதிர்த்து நின்று போராட அதற்கு எதிரே தனி ஒருவர் போராடி வென்றால் எவ்வளவு பெருமிதம் இருக்குமோ அவ்வளவு பெருமிதமும் மனநிறைவும் அதில் தொனிக்கின்றன.

அந்த மனநிறைவுக்கு மேல் ஓர் அநுபவ அதிசயம் வருகிறது. "நான் ஆளான அந்தக் கணத்திலே எனக்கு ஓர் அரிய பேறு கிடைத்தது; அப்பொழுதே நான் இனி ஒரு தாயின் வயிற்றிலே சென்று பிறவாத நிலையை அடைந்தேன்" என்கிறார்.

"அன்றே பெறற்கு அரியன் ஆயினேன்.”

ஆளான அப்போதே, ஒருவரால் என்னை மகவாகப் பெறுதற்கு அரியன் ஆகிவிட்டேன்.

இதை எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

துரத்தித் துரத்தி விளையாடும் விளையாட்டு ஒன்று உண்டு. அதில் பல பிள்ளைகள் துரத்தி விளையாடுவார்கள். தாய்ச்சி என்று ஒரு பெண் திண்ணையில் அமர்ந்திருப்பாள். அவளைத் தொட்டுவிட்டால் அப்புறம் மற்றப் பிள்ளைகள் அந்தக் குழந்தையைத் துரத்துவது நின்றுவிடும். அதுபோலக் கர்மம் நம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. நாம் பிறவியென்னும் பாதையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இறைவன் அடியைப் பற்றிக்கொண்டு விட்டால் கர்மம் நின்றுவிடுகிறது; ஓட்டமும் நின்றுவிடுகிறது.