பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

முன்பு காலாற நடை பழக எங்கெங்கோ போவோம்; இப்போது திருக்கோயிலை வலம் வருவோம். முன்பு எல்லாரிடமும் நண்பு கொள்வோம்; இப்போது ஆண்டவனடியவர்களை நண்பர் ஆக்குவோம். வெறும் சாதமாக உண்பதை ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து பிரசாதமாக உண்போம். காணும் காட்சிகளில் இறைவன் தொடர்பு, கேட்கும் இசையில் இறைவன் புகழ், மோந்து பார்க்கும் மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பித்தல், உண்ணும் உணவை அவனுக்கு நிவேதித்தல்,பரிச உணர்ச்சியில் அவன் நினைவைக் கொள்ளுதல்— இப்படியாக எல்லாவற்றிலும் அவனுடைய நினைவை எப்படியாவது இணைப்போம்.

இது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழலாம். புதிதாகத் திருமணம் செய்து கொண்டவன் எப்போதும் தன் காதலியை நினைந்துகொண்டே இருப்பான். புடைவைக் கடைக்குப் போனால் அவளுக்குப் புடைவை வாங்க வேண்டுமென்று எண்ணுவான். பூக்கடைக்குப் போனால் மலர் வாங்கி அவளுக்குச் சூட்டவேண்டுமென்று நினைப்பான். அலுவலகத்தில் வேலை செய்யும் போது அவளையே நினைத்துக்கொண்டிருப்பான். எப்பொழுது மணி அடிக்கப் போகிறது என்று காத்துக் கொண்டிருப்பான். பிறகு, ‘சினிமாவுக்குப் போக வேண்டும்’ என்றெல்லாம் எண்ணமிடுவான். இவையாவும் அவனுக்குத் தன் காதலியின்பால் உள்ள அன்பினால் விளைவன. அவசியமான வேலை காரணமாகப் போக முடியவிட்டால், "ஐயோ! அவளிடம் போகமுடியவில்லையே!” என்று ஏங்குவான்.

இவ்வாறே இறைவனிடம் அன்பு உண்டானால், எப்போதும் அவனையே நினைக்கும் நினைவு உண்டாகும். மாடு முளையைச் சுற்றியே வட்டமிடுவதுபோல இறைவனைச் சுற்றியே நம் எண்ணங்கள் படரும். வெவ்வேறு வகையான செயல்களில் ஈடுபட்டாலும் எப்போதும் அவன் நினைவு இருந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இருப்பது அன்பு நெறியின் முதல் நிலை. காரைக்கால் அம்மையார், அன்பு நெறியில் முறுகி நின்றவர்.