பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

ஆகவே, உணவை உட்கொள்வது உடனடியாகப் பசி தீரும் பயனைத் தந்தாலும் முடிந்த பயனாகிய நல்வாழ்வுக்கு உதவியாக இருக்கிறது. நாம் எது செய்தாலும் அது நம் நல்வாழ்வுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ உதவி செய்வதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய காலமும் முயற்சியும் வீணாகிவிடும். சூதாடுவதில் நேரத்தையும் பொருளையும் இழப்பவன், லட்சியமாகிய நல்வாழ்வுக்குப் பகையாகிய காரியத்தைச் செய்கிறான். தன் நல்வாழ்வையே நினைப்பவன் அத்தகைய செயல்களைச் செய்ய மாட்டான்.

நமக்கு இன்னதுதான் முடிந்த முடிபாகிய லட்சியம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் நாம் செய்யும் எல்லாச் செயல்களும் அதைச் சார்ந்தே இருக்கும். அந்த லட்சியத்தை நினைத்துக் கொண்டிருப்போம். அந்த நிலைதான் முதல் நிலை; ஒன்றே நினைந்திருக்கும் நிலை.

உலகிலுள்ள சூழ்நிலை நாம் ஒரு லட்சியத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் மயக்குகிறது. "குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று அப்பர் சுவாமிகள் சொல்வார். ஒருவாறு இன்னதுதான் லட்சியம் என்று தெரிந்து கொண்டாலும் தெளிவு பிறப்பதில்லை. தெளிந்தாலும் வேறு வகையான ஆசைகளும் எண்ணங்களும் குறுக்கே வந்து குழப்புகின்றன. “ஆறுகோடி மாயா சத்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின” என்று மணிவாசகர் சொல்வார். அத்தகைய இடர்ப்பாடுகளினின்றும் நீங்கவேண்டும். நாம் ஒரு லட்சியத்தை நினைப்பதோடு நில்லாமல், அதை உறுதியாகத் துணிந்து நினைக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கிச் செல்லும் நெறியில் வரும் இடையூறுகளை வென்று ஒழித்து விலகவேண்டும். இது அடுத்தபடி.

“ஒன்றே துணிந்து ஒழிந்தேன்"

என்று இந்த நிலையைச் சொல்கிறார் அம்மையார்.