பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கங்கை என்றவுடன் அதை வருவிப்பதற்காகப் பகீரதன் செய்த தவம் நினைவுக்கு வருகிறது. தன்னைத் தாங்குவார் யார் என்று செருக்குடன் இருந்த அதன் கொந்தளிப்பை அடக்கி இறைவன் தன் சடையில் வைத்துக் கொண்டான்.

பகீரதன் கங்கையை நோக்கித் தவம் செய்தான். பிரமனை நோக்கித் தவம் செய்தான். அவன் விருப்பம் நிறைவேறவில்லை. கடைசியில் இறைவனை நோக்கித் தவம் செய்தான். அப்போது அவன் காரியம் கைகூடிற்று. இறைவன் தவத்தின் பயனைத் தருபவன் என்பதை அந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

ஒன்றையே நினைத்திருப்பதும் ஒரு தவத்தான். அதை நம்முடைய முயற்சி ஒன்றினால்மட்டும் நிறைவேற்ற முடியாது. இறைவன் திருவருள் இருந்தால்தான் நிறைவேறும். "அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்று மணிவாசகரும், "எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத்து உன்னை, வைத்தாய்” என்று சுந்தரரும், "நினைப்பித்தால் நின்னை நினைப்பேன்" என்று நம்பியாண்டார் நம்பிகளும் அருளியவை இந்தக் கருத்தை வலியுறுத்தும்.

ஆகவே, பகீரதன் தவத்தை நிறைவேறச் செய்து கங்கையைத் தன் சடையிலே வைத்த இறைவன், அவனையே நினைக்கும் தவத்தையும் நிறைவேறச் செய்வான் என்பது: குறிப்பு மற்றொன்று, "விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல், மண்ணுக் கடங்காமல்" செருக்குற்று வந்த கங்கையை ஆண்டவன் தன் சடையில் அடக்கி அதன் செருக்கை நீக்கினான். இறைவனை நினைக்கும் எண்ணத்துக்கு மாறாக இருப்பது தான், எனது என்னும் செருக்கு. அந்தச் செருக்குப் போனால்தான் தவம் பலிக்கும். அதைப் போக்கித் தவம் பலிக்கச் செய்கிறவன் சிவபெருமான் என்பதும் ஒரு குறிப்பு.

இறைவன் திங்களை அணிந்து கதிர்விடும் திரு முடியுடையவன். "திங்கட் கதிர் முடியான்." சந்திரன் குருத்துரோகமும் சிவத்துரோகமும் செய்தவன். தக்கயாகத்தில் இறைவன்