பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரானென்று அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவன் என்றும் நமக்குப் பிரானாக, தலைவனாக, பரமோபகாரியாக இருக்கிறான். அவன் நம்மை ஆட்கொண்ட பின்பு இந்த உண்மை புலனாகிறது. அவனுடைய பெருங்கருணையை நினைந்து இன்புறுகிறோம்; உருகுகிறோம்.

அமையார் இறைவன் என்றும் பிரானாக உள்ளவன் என்பதை நினைவூட்ட முதலில் பிரானாகக் கொண்டதைச் சொன்னார். பின்பு ஆட்பட்டதைச் சொன்னார்.

இப்போது அந்த இரண்டையும் நினைந்து வியக்கிறார்.

"அதுவேபிரான் ஆமாறு: ஆட்கொள்ளுமாறும்
அதுவே.”

தன்னை இதுகாறும் நாடாமல் போதை வீணாக்கி, யார் யாரையோ தலைவனாகக் கொண்டானே என்று அடியவனைப் புறக்கணிப்பதில்லை இறைவன். அவன் ஆசுதோஷி; கணத்தில் மகிழ்பவன். எத்தனை தவறு செய்தாலும் அதை மறந்து தன்பால் அடைக்கலம் புகுந்தால் உடனே ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்கும் கருணைக்கடல் அவன். “பிரானாககக் கொள்ளலுமே இன்புற்றேன்” என்று முன்பு சொன்னார். உலகில் யாரையேனும் ஒருவன் புகலடைந்து தலைவனாகக் கொள்ளுவானானால் அவனைத் தலைவன் உடனே ஏற்றுக்கொண்டு, அவனுக்கு நன்மை செய்வதில்லை. அப்படிச் செய்வதற்கு அவனுடைய அணுக்கத் தொண்டார்கள் விடமாட்டார்கள். நாம் எல்லாம் இத்தனை காலம் காத்திருக்க, நேற்று வந்தவனுக்கு உடனே சிறப்பா? என்று பொருமுவார்கள் வந்தவனைச் சேய்மையிலே வைத்து, அவனைப் பல வகையிலும், சோதனை செய்து மெல்ல மெல்ல அணுகி வரச்செய்து, பிறகே நலம் செய்வார்கள். இது மற்றத் தலைவர்களின் இயல்பு.

சிவபெருமானோ அத்தகையவன் அல்லன்."நீயே பிரான், என்று புகலடைந்தால் நம்மை வாரி அணைத்துக்கொள்வான்; கூட்டத்தில் வழி தெரியாமல் போய் அழுக்குக்குழியில்