பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 காலந்தோறும் தமிழகம் பிடுகின்றன. விக்கிர சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என்ற மூவர் உலாக்களும் கலிங்கத்துப் பரணியும் அவ்வாறே வரிசைப்படுத்துகின்றன. ஆகவே, பலநூறு ஆண்டுகளாகத் தாழ்ந்து புகழ்குன்றிக் கிடந்த சோழ அரசை, மீண்டும் நிறுவி, உயர்நிலைக்குக் கொணர அடிகோலியவன் விஜயாலய சோழனே ஆவன். விஜயாலய சோழன் விஜயாலயன், தஞ்சையைக் கைப்பற்றித், தலைநகர் ஆக்கினான் என்றும், அத்தஞ்சையில் கொற்றவைக்குக் கோயில் எடுப்பித்தனன் என்றும் திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. தஞ்சைக்கு அடுத்த செந்தலையில் வாழ்ந்தவரும், பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசர்களாய் அவர்களுக்குத் துணையாய்ப் பாண்டியர்களோடு போரிட்டு, வந்தவரும் ஆகிய முத்தரையர் ளன்பார், 'தஞ்சைக்கோன்’ தஞ்சை நற்புகழாளன்’ என்று பட்டப் பெயர்களை மேற்கொண் டிருந்தனர். அதனால், செந்தலையைத் தம் தலைநகராகக் கொண்டிருப்பினும், முத்தரையர் தஞ்சையையும் கைப்பற்றி ஆண்டு வந்தனர் எனத் தெரிகிறது--ஆகவே, விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றின்ான் என்றால், அவன் அத் தஞ்சையை முத்தரையரிடமிருந்தே கைப்பற்றியிருத்தல் வேண்டும். வடக்கே சாளுக்கியரோடும், தெற்கே பாண்டியரோடும் ஒயாப் போர் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்ட பல்லவரால், தஞ்சைத் தரணி, முத்தரையர் கையிலிருந்து சோழர் கைக்கு மாறியதைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. மேலும் முத்தரையர், சோழர் இருவருமே தம் நண்பர்களாகவே, ஒரு நண்பன் கையிலிருந்து வேறொரு நண்பன் கைக்கு மாறியதை அவர்கள் பெரிதாக பொருட் படுத்தவில்லை போலும். - -