பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலமும் கவிஞர்களும்

17


கற்பனை’ என்று கூறுகின்றார், ஒரு பொருள், கருத்து, உணர்ச்சி ஆகியவை சம்பந்தப்பட்ட உணர்வால் ஒற்றுமையுள்ள காட்சிகளை இணைத்து நிற்பதுதான் இயைபுக் கற்பனையாகும்.[1]

வள்ளுவப் பெருந்தகை துறந்தார் பெருமையைப் பற்றி இவ்வாறு கூறுவர் :

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

[2] இக்குறள் மணியில் அடங்கியுள்ள கற்பனையும் இயைபுக் கற்பனையே. துறந்தார் பெருமையை எண்ணிப் பார்த்த கவிஞருக்கு இறந்தாரை எண்ணிப் பார்க்கும் செயல் நினைவுக்கு வருகின்றது. அது மிக அழுத்தமாகத் துறந்தார் பெருமையைச் சிறப்பித்து நிற்கின்றது. நிலமும், கடலும், வானும் மற்றும் இவ்வையகத்திலுள்ள பொருள்களனைத்தும் எல்லையுடையன. ஆகவே, அவற்றினை ஆசிரியர் குறிப்பிடவில்லை. கடல் மணல், வான உடுக்கள் முதலியவற்றைக் கொண்டு துறந்தார் பெருமையின் சிறப்பை அளவிட்டுக் கூறியிருந்திருக்கலாம் ; எனினும், வள்ளுவர் அவற்றினைக் குறிப்பிடவில்லை. இவ்வையத்தில் அரசினர் பிறப்பு-இறப்புக் கணக்கெடுக்கின்றனர். இக்கணக்குபடி பிறப்பு-இறப்புத் தொகை அளவுப்பட்டுக் கிடக்கும். உலகம் தோன்றின நாள்தொட்டு இன்றுவரை இறந்தார் தொகை இவ்வளவு தான் என்று அளவுபடுத்திக் கூறவியலாது. தவிர, உயர்


  1. The associative imagination associates with an object, idea or emotion images emotionally akin. If such association be not based on emotional kinship, the process must be called Fancy. --C.T. Winchester.
  2. குறள்-22 47-2