பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211 கால்டுவெல்


அவனுடைய இந்து திவானாகிய சீனிவாசராவும் அவனைப் பிடித்து நவாபின் கட்டளைப்படி தூக்கிலிடப்பட்டான் என்று அவன் கூறினான். அக்கிழவன் 85 வயதுடையவனாயிருந்தும் 1801 இல் மதுரை திருநெல்வேலி நாடுகளில் தூக்கிலிடப்பட்ட முக்கியமான கலகக்காரரைப் பற்றிக் கூட சரியான செய்திகளைக் கூறுமளவிற்குத் தெளிவான நினைவாற்றல் உடையவனாயிருந்தான். கான்சாகிபு ஒரு இந்து என்பதையும் அவன் உறுதிப்படுத்தினான். கான்சாகிபினுடைய சிறப்பைப் பற்றி ஏட்டுக் குறிப்புகளில் காணப்படாததால் அக்கிழவன் கூறியதுபோல் ஆங்கிலேயரின் கட்டளைப்படியின்றி நவாபின் உத்தரவுப்படியே அவன் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டுமென முடிவு செய்யலாம். அத்தகைய ஐயத்தை ஆங்கிலப்படைத் தலைவனுக்கே நாம் விட்டுவிடுவோம்.

யூசுபுகானும் மதுரையும் கைப்பற்றப்பட்ட பின் கலகங்கள் சிதறடிக்கப்பட்டன. ஆனால் நாடு இதுவரை கண்டிராத சிறந்த அறிவு நிரம்பிய ஒரு ஆட்சியாளனை இழந்து விட்டது. எனவே நாட்டின் பொருளாதார நிலை வெகு சீக்கிரத்திலேயே சீர்கேடான நிலையை அடைந்தது.

'யூசுப்கானுக்குப் பின் முதலி குடும்பத்தினரில் ஒருவன் வந்தான் என்று லூவிங்டன் கூறுகிறார். அவனுடைய ஆட்சி எட்டு மாதங்களே நடைபெற்றது. பின்னர் அவனுக்குப் பதில் ராஜா குக்மது ராம் என்ற இந்து ஒருவன் ஆட்சி செய்தான். யூசுபுகான் ஜமாபந்தியைவிட மிகக் குறைவான ஜமாபந்தியே அவன் ஆட்சியின் கீழ் ஏற்பட்டது. அவனை அடுத்து ஷேக் மகமது அலி ஒன்பது மாதங்கள் ஆண்டான். அவன் காலத்தில் ஜமாபந்தி மேலும் அதிகமாய்க் குறைந்து விட்டது. அத்தலைவனின் திறமையின்மை அமைதியாயிருந்த பாளையக்காரர்களைப் பழையபடி அடக்குமுறையற்று மூர்க்கமான கொள்ளைகளிலும் கொடூரங்களிலும் ஒய்வில்லாது ஈடுபடும்படி தூண்டியது. இக்குழப்பநிலை 1792 இல் கம்பெனியின் ஆட்சி ஏற்படும்வரை நீடித்தது. இந்த ஆட்சி மாற்றத்தால் பாளையக்காரர்களின் ஒழுக்கம், நிலை இவற்றில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. நவாபினுடைய நிலைபெற்ற ஆட்சியினால் கலகக்காரத் தலைவர்கட்கு மிகுந்த தன்னம்பிக்கையும் வெற்றியும் ஏற்பட்டது. நவாபின் அமுல்களினுடைய இழிவான ஒழுங்குகள், கையுறை முதலியவை நவாபினுடைய மக்கள் மனத்தில் பிளவுபட்ட ஆட்சியில் ஏற்படும் தீமைகளைப் பதிய வைக்கத்தக்க அளவு தூண்டுகோலாக அமைந்தன. அதனால் உறுதியான மாற்றம் ஏற்பட இயலாதிருந்தது. யூசுபுகான்