பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 406


நான்காவது கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் மன்னார் கோயில், அம்பா சமுத்திரம் வட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமம்.

சேர்மாதேவி - சரியாக சேரன் - மகா - தேவி மேற்கு அல்லது மலையாள மாநிலத்தின் மன்னனாகிய சேரனால் வணங்கப்பெற்ற பார்வதியாகிய மகாதேவியின் கோயிலாகும். சேர மன்னன் சிற்சில சமயங்களில் அங்கு தங்கியதாக திருவாங்கூர் வரலாற்று ஆசிரியரால் சொல்லப்பட்டுள்ளது.

17ம் நூற்றாண்டுவரை சேரமாதேவி, தென்காசி, களக்காடு, திரிகனன் குடி, வள்ளியூர் முதலிய இடங்களில் திருவாங்கூர் மன்னர் தங்கியிருந்தார், என்ற செய்தியை ஆவணங்களும் கல்வெட்டுக்களும் தெளிவாகத் தெரிவிக்கின்றன - பக்கம் 34.

1382லிருந்து 1444 வரை, 62 ஆண்டுகளாக அரசு செலுத்தி வந்த சேர உதயமார்த்தாண்ட வர்மனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும் போது வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்:

இந்த மன்னனது ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி பக்கத்திலுள்ள தென் கிழக்குத் திருவாங்கூர் உடைமைகளெல்லாம் திரும்பக் கைப் பற்றப்பட்டன. மன்னர் வள்ளியூரிலும் சேரன் மாதேவியிலும் அடிக்கடி தங்கியிருந்தார்.

இந்த அரசனின் அமைதியும் போர் வெறுப்பும் உடையதன்மையின் விளைவாக கிழக்கிலுள்ள, இவருக்கு அடங்கிய சில தலைவர்கள் கீழ்ப் படியாதிருந்தனர். எனவே தொடர்ந்து போராட்டம் இருந்து வந்தது. பின்னர் மன்னர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தபோது ரெட்டியாபுரம் தலைவன் வள்ளியூரை முற்றுகையிட்டான். மன்னனின் மருமகன் இப் போரில் தோற்கடிக்கப்பட்டான். தோல்வியின் இழிவைப் பொறாத மரு மகன் தற்கொலை செய்து கொண்டான்.

'இந்த குலசேகரப் பெருமாள் அளித்த பல மானியங்கள் இந்த இடங்களில் உள்ளன. அவற்றுள் சிலவற்றை முன்பே பார்த்தோம். இது சேரமாதேவி மன்னனுக்கு விருப்புடைய இடம். அதன் பயனாக இம்மன்னன் சேர உதயமார்த்தாண்ட வர்மன் என்று அழைக்கப்பட்டான்.

'அவனுடைய ஆட்சிக் காலத்தின் இறுதியில், பாண்டிய மாநிலத்திலுள்ள தலைவர்களின் முறைகேடான செயல்களினால், அரச குடும்பத்தினர் எளயடத்துநாடு கொட்டாரக் கரைக்கு மாற்றப்பட்டனர். வள்ளியூரையும் கிழக்கிலுள்ள ஏனைய உடைமைகளையும் ஆட்சி செய்ய ஒர் ஆளுநர் நியமிக்கப்பட்டார்.