பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கால ஆராய்ச்சி வாய்ந்த பகையரசரைக் கொன்றவன்' என்பதும், போரில் கொங்கரையும் வஞ்சிக்கோவையும் கொன்றவன் என்பதும் தெரிகின்றன. இவற்றால், இச் சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ (சேர அரசன்) போரில் கொல்லப்பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால் இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்படவில்லை. (2) முன்சொன்ன 74ஆம் செய்யுள் தமிழ் நாவலர் சரிதையில், 'சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக்கு எழுதிவிடுத்த பாட்டு" என்ற தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும் இதுவும் வேறுபடக் காரணம் என்ன? (3) புறநானூற்று 74ஆம் செய்யுள் அடிக்குறிப்பு, கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுளின் அடியில், "இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவ்விரு கூற்றுக்களும் தம்முள் மாறுபடுதலைக் கண்ட பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், "துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாக, சிறை வீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரன் ஆவன் என்று கொள்ளவேண்டும்" என்று கூறி அமைந்தனர். இங்ங்னம் பேரறிஞரையும் குழப்பத்திற்குட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புக்களைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது. 2. கோச்செங்கணான் 70 சிவன் கோவில்கள் கட்டினான் என்று திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்." சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ-திருமால் கோவிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பெற்ற காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்ககாலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழ் உலகில் பிறசமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக்கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஓர் அரசன் 70 கோவில்கள் கட்டினான் என்றல் நம்பத்தக்கதன்று. ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர், பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பெளத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்ககாலப் பாண்டியன் அளித்த பிரம்மதேய உரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/103&oldid=793101" இலிருந்து மீள்விக்கப்பட்டது