பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கால ஆராய்ச்சி அகலிடத்தைக் களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டான்,' என்பதை அறிவிக்கிறது. இவ்விரு செப்பேட்டுச் செய்திகளால், (1) களப்பிரர் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுமுன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் பாண்டி மன்னராக இருந்தனர்; (2) மதுரையிற் சங்கம் இருந்தது; (3) மகாபாரதம் தமிழ்ப் படுத்தப் பட்டது என்பன நன்கு புலனாகின்றன. இதுகாறும் கண்ட முடிவுகளை நோக்க, கி. பி. 300 முதல் கி.பி. 550 வரை மதுரை களப்பிரர் ஆட்சியில் இருந்தமையால், தமிழ்ச் சங்கம் இருந்து செயலாற்றியிருந்தல் இயலாதென்பதை நன்குணரலாம். இனிக் கி. பி. 575 முதல் பாண்டி நாட்டை ஆளத் தொடங்கிய கடுங்கோன் முதலிய பாண்டி மன்னருடைய செப்பேடுகளையும் கல்வெட்டுக்களையும் நோக்கும்பொழுது, அவர் தாமும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தமை தெரியவில்லை. மேலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டினரான சைவசமய குரவரும் தமக்கு முற்பட்ட காலத்தில் சங்கம் இருந்ததாகவே தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் நோக்கி, வரலாற்றுக் கண் கொண்டு காணின் இன்றுள்ள தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் ஈறாகவுள்ள பழைய நூல்கள் கி. பி. 300க்கு முற்பட்டவை எனத் துணிந்து கூறலாம். சங்க நூல்களின் இறுதிக் காலம் கி.பி. 300 எனின், அவற்றுள் ஒன்றாகிய புறநானூற்றின் இறுதிக்காலமும் அஃதே எனல் பொருந்துமன்றோ? இனி அப் புறப்பாடல்களின் காலப்பேரெல்லையைக் காண முயல்வது நமது கடமையாகும். இந்திய வரலாற்றோடு தொடர்பு கொண்ட சில நிகழ்ச்சிகளும் பெயர்களும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப்போரில் உணவு கொடுத்தது, வான்மீகியார் என்பவரின் பாடல் புறநானூற்றில் காணப்படுவது, மோரியர் படையெடுப்பு, (இரண்டாம்) கரிகாலன் இமயப் படையெடுப்பு என்பவை குறிக்கத்தக்கவை. இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி இங்கு ஆராய்வோம். பெருஞ்சோற்று உதியன்சேரலாதன் (கி.மு. 1000) அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/12&oldid=793138" இலிருந்து மீள்விக்கப்பட்டது