பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கால ஆராய்ச்சி அடுத்தும் சேரமான் பெருமாள், சுந்தரர் ஆகிய இருவரையும் அதன் பின்னும் வைத்துக் கூறியிருத் தலும், அப் பாவில் மணிவாசகரைக் குறியாமையும் கவனிக்கத் தகும். ஆனால், அதே இராஜராஜன் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவரான நம்பியாண்டார் நம்பி மணிவாசகர் செய்த திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் தெளிவாகக் குறித்தலால் நம்பியாண்டார் நம்பி காலமுதல் மணிவாசகர் பெருமையும் நூல்களின் சிறப்பும் சைவர்க்குப் புலனாகத் தொடங்கின என்பது தெரிகிறது. மேலும் காடநம்பி குறித்த முறைவைப்பு நம்பியாண்டார் நம்பியால் மாற்றப்பட்டுவிட்டது. அஃதாவது, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று காட நம்பி முறைப்படுத்தியதை நம்பியாண்டார் நம்பி சம்பந்தர், அப்பர், சுந்தரர் என முறைமாற்றி வைத்துவிட்டார். சைவத் திருமுறைகளுள் முதல் மூன்றும் சம்பந்தருடையன; அடுத்த மூன்றும் அப்பருடையன. ஏழாம் திருமுறை சுந்தரருடையது. இவை. மூன்றும் முறையே 384 பதிகங்களையும், 307 பதிகங்களையும், 100 பதிகங்களையும் உடையவை. பதிகங்களின் தொகை நோக்கி இவ்வாறு நம்பியால் முறைப்படுத்தப்பட்டன போலும்! அங்ங்னமாயின் 51 பதிகங்களையுடைய திருவாசகம் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டதில் வியப்பில்லை அன்றோ? இம்முறை வைப்பைப் பின்பற்றியே போலும் பின்வந்த (கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட) திருக்களிற்றுப்படியாரிலும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்றே முறை வைப்புக் காணப்படுகிறது. (செய்யுள் 70-73). 18 ஆம் நூற்றாண்டினரான தாயுமானவரும் 'எந்நாட் கண்ணியில் இதே முறை வைப்பு வைத்துள்ளமை காணத்தக்கது. இவையனைத்தும் மணிவாசகரை மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்டவராகப் பல நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த சைவப் பெருமக்கள் கருதினர் என்பதை உறுதிப்படுத்துதல் காணலாம்." - மாணிக்கவாசகரும் கல்வெட்டுக்களும் "தேவாரம் பாடிய மூவரின் பெயர்களை அவர்களின் சமீப காலத்துப் புலவர்கள் குறித்துள்ளார்கள். திருவிசைப்பா ஆசிரியர்களும், நம்பியாண்டார் நம்பியும் மூவருடைய பெயர்களைக் குறித்துள்ளார்கள். ஆனால் மாணிக்கவாசகர் பெயரை அவ்விதம் குறிக்கவில்லை. கி.பி. 10 ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படும் பட்டினத்தடிகளே அவரை முதன்முதலில், திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும் எனக் குறித்தவராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/137&oldid=793179" இலிருந்து மீள்விக்கப்பட்டது