உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கால ஆராய்ச்சி என ஒரு செய்யுள், மருத்து மலைப் படலத்தில் (58) வருகிறது. இதில் குறித்த "தியாகவிநோதன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு உரிய பட்டப்பெயராகும். சாசனங்களும் இதனை வலியுறுத்துகின்றன. இவ்வரசன் கி.பி. 1178 முதல் 1216 வரை ஆட்சி புரிந்தவன். இவன்கீழ்ச் சிற்றரசர் ஆகவும் அதிகாரி முதலியோராகவும் அமர்ந்தவர்கள் தங்கள் பட்டப் பெயரில் இவ்விநோதன் என்றதனைச் சேர்த்து வழங்கியிருக்கிறார்கள். தியாக விநோதன் மூவேந்த வேளான், தியாக விநோத பட்டன், அருங்கலை விநோதன் முதலிய சாசனத் தொடர்களை நோக்குக. இவற்றால் கம்பன் 12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் தனது பெருங் காப்பியத்தை இயற்றியுள்ளான் என்பது புலப்படும். மிகப் பழைய ஏட்டுப் பிரதி ஒன்றில், ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத் தேவன் திருவழுந்துர் நன்னாட்டு-மூவலூர்ச் சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான் காரார்கா குத்தன் கதை என்ற செய்யுள் காணப்படுகின்றது. இதுவும் இம்முடி வினையே வற்புறுத்துகிறது. சிலர் 'சகரயாண்டு என்று கூறுவது அபத்தம் என்று கொண்டு, இச்செய்யுள் மரபறியாதார் ஒருவரது பிற்கூற்று என்று சொல்லுவர். ஆனால், அக்காலத்து வழங்கிய சாசனங்கள் பலவற்றிலும் இத்தொடர் காணப்படுகிறது. சகாப்தம் புதிதாக வந்த வழக்கு ஆதலால், வரலாற்றினை உணராது, தவறாகச் 'சகரயாண்டு எனப் பெயர் வழங்கியதுபோலும்! மேற்குறித்த கால நிர்ணயத்திற்கேற்பவே கம்பனைக் குறித்த வரலாற்றுச் செய்திகள் பலவும் அமைந்துள்ளன. ஒட்டக்கூத்தரைப் பற்றியும் பிரதாபருத்திரனைப் பற்றியும் வரும் செய்திகள் இத்துணிவினையே முற்றும் ஆதரிக்கின்றன. எனவே, எண்ணிய சகாப்தம் என்ற செய்யுள் கொள்ளத்தக்கதன்று. ஆவின் கொடைச்சகரர் என்ற செய்யுளே கொள்ளத்தக்கது. "கம்பன் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன் என்பதே தேற்றம்" “கி.பி. 1376இல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டு (எபிகிராபியா கர்நாடிகா, வால்யூம் 5, ஹாஸ்ஸான் 77) இவ்வாண்டிற்கு முன் இரண்டு தலைமுறைக் காலமாகக் கம்ப ராமாயணம் கன்னட தேசத்தில் வழங்கி வந்ததென்று தெரிவிக்கின்றது. எனவே, கி.பி. 1325இல் கம்பனது பெருங்காவியம் கன்னட தேசத்திலும் பெரும் புகழ் பெற்றுப் பரவியிருந்ததென்பது புலனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/171&oldid=793262" இலிருந்து மீள்விக்கப்பட்டது