பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டின் காலம் - 61 (கெளமார சமயம்) சங்க காலத்திற்குப் பிற்பட்டதாகும். ஆகவே, முருகனை முழுமுதற் கடவுளாகப் பாடியுள்ள திருமுருகாற்றுப் படையாசிரியரான நக்கீரர், சங்க கால நக்கீரரின் வேறாவர் என்று கொள்வதே பொருத்தமாகும். - ஆவிநன்குடி சங்க கால வேளிருள் ஆவி என்பவனும், அவன் குடியினரும் ஒருவகையாளர். அவர்கள் பழநிமலை நாட்டையாண்டார்கள். வேள் ஆவி என்பவன் அவருள் முதல்வன். வேளாவியின் மரபில் வந்தவனே வையாவிக் கோப்பெரும் பேகன் என்பவன். இவன் ஆவியர்கோ (புறம். 147) எனப்பட்டான். ஆவிநன்குடி என்பதற்கு (வேள்) ஆவி (க்கோவின்) நல்ல குடியிருப்பு என்பது பொருள். ஆயின், திருமுறுகாற்றுப்படை பதிப்புகளில் ஆவினன்குடி என்பதே காணப்படுகிறது. ஆ (பசு), இனன் (சூரியன்) வழிப்பாட்டுப் பேறுபெற்ற குடியிருப்பு என்ற புராண வரலாற்றைத் தழுவி (ஆ - இனன் - குடி) ஆவினன்குடி எனப் பிற்காலத்தவர் ஏடுகளில் எழுதி இருக்கலாம் என்று கொள்வது பொருத்தமாகும். அது திருத்தம் பெறாமல் அச்சிடப்பட்டுள்ளது. ஆவினன்குடி என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்படும் இடப்பெயர் சங்க கால நூல்களில் இல்லை. செந்தில், முருகனுக்கு உரியதாக மதுரை மருதன் இளநாகனார் புறநானூற்றில் (செ.55) பாடியுள்ளார். பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருப்பதாக மதுரை மருதன் இளநாகனாரும் எருக்காட்டுர்த் தாயங்கண்ணனாரும் அகநானூற்றில் (செ 59, 149) பாடியுள்ளனர். அலைவாய் என்பது முருகனுக்குரியதெனப் பரணர் அகநானூற்றிற் (செ266) பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையிலும் 'அலைவாய் கூறப்பட்டுள்ளது. இது, நாமனூர் அலைவாய் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுவே செந்தில் என்பது அறிஞர் கருத்து. செந்தில், செங்கோடு, வெண் குன்றம், ஏரகம் என்பவை முருகற்குரிய இடங்கள் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இங்கு ஏரகம் குறிப்பிடப்பட்டுள்ளது. நவிரமலையில் காரியுண்டிக்கடவுள் கோவில் இருந்தது என்று மலைபடுகடாம் பகர்கின்றது. அக்காலத்தில் ஆவிநன்குடியில் முருகன் கோவில் இருந்திருக்குமாயின், அச்செய்தி ஐநூற்றுவர்க்கும் மேற்பட்ட சங்க காலப் புலவருள் ஒருவராலேனும் குறிக்கப்பட்டிருக்குமன்றோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/68&oldid=793386" இலிருந்து மீள்விக்கப்பட்டது